கோயம்புத்தூரில் புதன்கிழமை (27-02-2019) நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் எழுச்சி மாநாட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
அப்போது அவர், ''இந்த பாசிச பா.ஜ.க அரசுக்கு அடிமைச் சேவகம் செய்து அதற்கான கூலியை நம்முடைய தமிழ்நாடு அரசாங்கத்தின் கஜானாவில் இருந்து அதிகாரப்பூர்வமாக கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் ஆட்சி தான் இந்த எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க ஆட்சி. இது ஒரு கட்சியே அல்ல.
மறைந்த எம்.ஜி.ஆர் அவர்கள் ஆரம்பித்த கட்சியை முதலில் ஜெயலலிதா கைப்பற்றினார். ஜெயலலிதாவை பகடைக்காயாக வைத்துக்கொண்டு சசிகலா கூட்டம் கைப்பற்றி கொள்ளை அடித்தது. இப்போது எடப்பாடியும் ஓ.பன்னீர்செல்வமும் சேர்ந்து கைப்பற்றி இருக்கிறார்கள்.

இது எம்.ஜி.ஆர் ஆரம்பித்த அண்ணா தி.மு.க அல்ல. ஜெயலலிதா வைத்திருந்த அம்மா தி.மு.கவும் அல்ல. இப்போது இருப்பது அடியாள் அ.தி.முக.
தங்கள் பதவியைக் காக்க எதுவும் செய்வார்கள். கொலை வரைக்கும் செல்வார்கள். அதுதான் இன்றைக்கு நடந்திருக்கிறது. 5 பேர் கொலை. மறைந்த அம்மையார் ஜெயலலிதா சொகுசாக தங்குவதற்கு பயன்படுத்திய பங்களா கொடநாட்டு பங்களா. அங்கே மர்மமாக 5 கொலை நடந்திருக்கிறது.
இதை நாங்கள் யாரும் கண்டுபிடித்துச் சொல்லவில்லை. எடப்பாடி பழனிசாமி யார் யாரை இதற்குப் பயன்படுத்தினாரோ அவர்களே வெளிப்படையாக பேட்டி அளித்திருக்கிறார்கள். ஆகவே, ஒரு கொலைக்குக் காரணமான முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
நாமும் எத்தனையோ முதலமைச்சர்களை பார்த்திருக்கிறோம், கொள்ளை அடித்து, ஊழல் செய்து அதனால் சிறை வரை சென்ற முதலமைச்சர்களை நாம் பார்த்திருக்கிறோம். அதற்கு உதாரணம் அம்மையார் ஜெயலலிதா. ஆனால், ஒரு கொலைக் குற்றவாளியாக இருக்கக்கூடிய முதலமைச்சரை தமிழ்நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது. இது அவருக்கு வெட்கமோ இல்லையோ தெரியவில்லை. நாம் வெட்கப்படுகிறோம், வேதனைப்படுகிறோம்.
ஏற்கனவே அமித்ஷாவிடம் அடகு வைத்து விட்டார்கள், இந்த கொள்ளைக்கார கும்பலிடம் இருந்து தமிழகத்தை காக்க வேண்டுமெனச் சொன்னால், நமக்கு இரண்டு பணிகள் இருக்கிறது. அந்த இரண்டு பணிகளை இரண்டே வரியில் இந்த மாநாட்டில் சொல்லிவிட்டீர்கள். அதுதான், இந்தியாவை மீட்போம் – தமிழகத்தை காப்போம், அதற்கு உறுதியேற்போம்''. இவ்வாறு பேசினார்.