“வீட்டை விட்டு வெளியே வரும்போது உங்களுக்கு கால் இருக்காது.. நாக்கு இருக்காது” என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சசிகலா புஷ்பாவின் வீடு, கார்கள் திடீரென அடித்து நொறுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக பாஜகவின் மாநில துணைத் தலைவராக இருக்கும் சசிகலா புஷ்பா சர்ச்சைக்கு பெயர் போனவர். இவர் அதிமுகவில் இருந்தது முதல் தற்போது பாஜகவில் இருப்பது வரை ஏகப்பட்ட சர்ச்சைகள் சசிகலா புஷ்பாவின் பின்னால் அணிவகுத்து நிற்கிறது. இந்நிலையில், தூத்துக்குடி ஆண்டாள் தெருவில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் பாஜக சார்பில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.
இதில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா, மாநில பொதுச் செயலாளர் பொன் பால.கணபதி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். அப்போது, இந்த நிகழ்ச்சியில் சசிகலா புஷ்பா பேசும்போது, "ஒன்றரை வருட திமுக ஆட்சியில் ஒன்றும் கிழிக்கவில்லை. சுய புராணம் பாடத் தகுதி உள்ளவர்தான் அண்ணாமலை.
முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்கு பிறகு அண்ணாமலைக்கு தான் மக்கள் கூட்டம் கூடுகிறது. சனாதனம் பற்றி நாங்கள் பேசுவோம். ஏனென்றால், அது தான் எங்கள் கொள்கை" எனப் பேசியிருந்தார். இது ஒருபுறம் இருக்க, தூத்துக்குடியில் நடந்த பொதுகூட்டத்தில் திமுக அமைச்சர் கீதாஜீவன் பேசும்போது, "பாஜக தலைவராக இருக்கும் அண்ணாமலை மேடை ஏறும்போது மட்டும்தான், அவரது கட்சி நிர்வாகிகளும் மேடை ஏறுவார்கள்" எனக் கிண்டலாக பேசினார்.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சசிகலா புஷ்பா பேசும்போது, "நீங்கள் வீட்டில் இருந்து வெளியே வரும்போது கால் இருக்காது, நாக்கு இருக்காது. தூத்துக்குடியில் மாற்றம் வரப்போகிறது. கீதாஜீவன் அமைச்சராக இருக்கும்போது தூத்துக்குடியில் திமுக தோற்கப் போகிறது. பிஜேபி வெற்றி பெறப் போகிறது” எனக் கடுமையாக பேசினார்.
இதையடுத்து, அவர் கூட்டத்தில் பேசி முடித்த அடுத்த நாள் சசிகலா புஷ்பாவின் வீடு மற்றும் அவரது கார் கண்ணாடி உடைக்கப்பட்டு வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டுள்ளது. பின்னர், இச்சம்பவம் குறித்து தூத்துக்குடி நகர ஏஎஸ்பி சத்யராஜ் தலைமையில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து, சசிகலா புஷ்பாவின் வீடு, கார் உடைக்கப்பட்டதை அடுத்து, பாஜகவினர் தொடர்ந்து அவரது இல்லத்திற்கு வந்து கொண்டிருப்பதால் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.