2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் பாமக, பாஜக, தேமுதிக, த.மா.கா. உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை சீட் என்றும், எந்தெந்த தொகுதிகள் என்றும் ஒதுக்கி வருகிறது அதிமுக.
இதனிடையே திடீரென கடந்த வாரம் அதிமுகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது. இதில், சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடுகிறார்; தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார்; சென்னை ராயபுரம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக அமைப்புச் செயலாளர் டி.ஜெயக்குமார் போட்டியிடுகிறார்; தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியில் எஸ்.பி.சண்முகநாதன் போட்டியிடுகிறார்; திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை (தனி) சட்டமன்றத் தொகுதியில் எஸ்.தேன்மொழி போட்டியிடுகிறார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என விருப்ப மனு தாக்கல் செய்தவர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். இந்தநிலையில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தங்களுக்கு சீட் ஒதுக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து வருவதால் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாக தாமதமாகி வருகிறது என்கின்றனர் அக்கட்சியினர்.
மேலும், கம்பம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் மகன் ஜெயபிரதீப் போட்டியிட விருப்பம் தெரிவித்திருக்கிறார். இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலில் கம்பம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயபிரதீப் என இருக்கிறதாம். இந்நிலையில், பாஜகவும் கம்பம் தொகுதியைக் கேட்டு உறுதியாக நிற்பதால் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் தாமதமாவதற்கு அதுவும் ஒரு காரணம் என்கின்றனர்
இந்தத் தொகுதியில் கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் ஜக்கையன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் எடப்பாடி பழனிசாமி அணி, தினகரன் அணி என பிரிந்தபோது, ஜக்கையன் தினகரன் அணியில் இருந்தார். புதுச்சேரியில் உள்ள ரிசார்ட்டில் தங்கியிருந்த தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களில் ஒருவராக இருந்தவர், புதுச்சேயில் இருந்து திரும்பியதும், எடப்பாடி பழனிசாமியை ஆதரிப்பதாக சபாநாயகர் தனபாலை நேரில் சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போதிலிருந்து எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து வரும் ஜக்கையன், 2021 சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளார்.