2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி வெற்றி பெற்றும் தமிழகத்தின் முதலமைச்சராக நான் பொறுப்பேற்பேன் எனறு சரத்குமார் தெரிவித்துள்ளார்.
சமத்துவ மக்கள் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் சரத்குமார் தலைமையில் நேற்று நெல்லையில் பொதுக்கூட்டம் நடந்தது. அதில் பேசிய அவர், “56 ஆண்டுகள் இரு திராவிட கட்சிகள் தமிழகத்தை ஆட்சி செய்துவிட்டனர். அண்மையில் வந்த சில தலைவர்கள் இவர்களை குறை செல்ல வேண்டாம் என்று கூறுகிறார்கள். ஆனால் குறை செல்லவேண்டாம் என்றாலும் அது நிறைவாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். இன்று வெள்ள நீர் வடியாதது குறித்து மறியல் போராட்டங்கள் முற்றுகை எல்லாம் செய்துகொண்டிருக்கும் மக்கள், தேர்தல் வந்தவுடன் அவர்களுக்குத்தான் மீண்டும் வாக்கு செலுத்தி வெற்றி பெற செய்கிறார்கள்; அதற்கு காரணம் எல்லாம் பணம். ஜனநாயகம் போய் எல்லாம் பணநாயகமாகிவிட்டது. அதனை எல்லாம் மாற்றவேண்டும். உங்களால் முடியுமா என்று என்னை பார்த்து கேட்டால் நிச்சயம் எங்களால் முடியும் என்று நான் கூறுவேன்.
நான் ஒரு அமைதியான ஆறு; ஓடுவதும் தெரியாது, ஆழமும் புரியாது. ஆனால் 2016 ஆம் ஆண்டு தேர்தலில் 234 தொகுதிகளிலும் நாங்கள் நிற்கும் போது எங்களின் வேகமும், ஆழமும் புரியும். தமிழகத்தில் 1954 முதல் 1963 வரை பொற்கால ஆட்சியை கொடுத்தவர் காமராஜர். அப்பழுக்கற்றவர் காமராஜர். 1967 ஆம் ஆண்டு காமராஜர் தோற்றுவிட்டார் என்று சரித்திரம் சொல்கிறது; ஆனால் அவர் தோற்கவில்லை தமிழகம் தான் தோற்றது. தமிழக அரசியல்தான் தோற்றது என்று எழுத வேண்டுமே தவிர, ஒருபோதும் காமராஜர் தோற்கவில்லை.
அதன்பிறகு தமிழகத்தை மாறி மாறி திராவிட கட்சிகள் தான் ஆட்சி செய்துகொண்டிருக்கின்றனர். மாறி மாறி இலவசங்களை கொடுத்து கொடுத்து மக்களை கெடுத்து வைத்திருக்கின்றனர். தற்போது குடும்பத்தலைவிக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை கொடுக்கிறார்கள். ஆனால் அவர்களது கணவன் வேலையில்லாமல் டாஸ்மாக்கிற்கு மட்டும் போயிட்டு வந்து நிம்மதியாக படுத்து தூங்குகிறார்கள். இதேபோன்று அரிசி, லாப்டாப், சைக்கில் போன்று அனைத்தையும் இலவசமாக கொடுத்துவிடுகிறீர்கள். அப்புறம் எப்படி அவர்கள் வேலைக்கு செல்வார்கள்? டாஸ்மாக்கிற்குத்தான் போவார்கள். இதையெல்லாம் சமத்துவ மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு மாற்றுவோம்.
2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் தங்களது இலக்கு அல்ல; 2026 ஆம் அண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று தமிழக முதல்வராக பதவியேற்பேன். திராவிட இயக்கங்கள் தொடர்ந்தால் இன்னும் 10, 20 ஆண்டுகளின் நாம் வாக்களித்து அவர்கள் வெற்றிபெறவேண்டிய நிலை மாறி வட இந்தியர்கள் மட்டும் வாக்களித்து திராவிட இயக்கங்கள் வெற்றி பெறும் நிலைமை உருவாகிவிடும். எல்லாரும் எல்லா மாநிலத்திற்கும் செல்லலாம்; ஆனால் அந்ததந்த மாநிலத்தின் மக்களுக்குத்தான் முதலில் வேலை கிடைக்க வேண்டும்” என்றார்.