தமிழகத்தில் நோய்த்தொற்று பரவல் காரணமாக இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் கோவில்களில் சிறப்பு வழிபாடு முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.
அதிலும் இந்த கோடை காலங்களில் பெரும்பாலான இந்துக் கோவில்களில் தீ மிதித்தல் விழா, தேர் திருவிழா, பூச்சொரிதல் விழா உள்ளிட்ட விழாக்கள் தமிழக மக்கள் கொண்டாடுவது வழக்கம்.தற்போது பரவிவரும் கரோனா அதிகரித்து விடக்கூடாது என்பதற்காக தமிழக அரசு முன்னெச்சரிக்கையாக அனைத்து விழாக்களுக்கும் தடை விதித்துள்ளது.
அதில் ஒவ்வொரு வருடமும் வழக்கமாக நடைபெறும் சமயபுரம் மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவானது கரோனா காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒரு சில சடங்குகளை நிச்சயம் செய்ய வேண்டும் என்று கூறியதோடு, கடந்த வருடமும் தேர் இழுக்கபடவில்லை, இந்த வருவடமும் சமயபுரம் தேரை நிச்சயம் இழுக்க வேண்டும் என்று பக்தர்கள் கேட்டுக் கொண்டனர்.
எனவே பெரிய தேரை இழுக்க இந்த முறை அனுமதிக்கப்பட முடியாது எனவே சிறிய அளவிலான தேரை கோவில் வளாகத்திற்கு உள்ளேயே எழுத்து இந்த சடங்குகளை செய்து கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை கோவில் வளாகத்திற்கு உள்ளேயே சிறிய அளவிலான தேர் இழுக்கும் திருவிழா துவங்கியது.
வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் சமயபுரம் தேர் திருவிழாவிற்கு சுற்றுவட்ட கிராமப்புற பகுதிகளில் இருந்து அதிக தலைக்கட்டு உள்ள கிராமங்களில் இருந்து பொதுமக்கள் பக்தர்கள் என பலர் வந்து சமயபுரம் தேரை வடம் பிடித்து இழுப்பது வழக்கமான நிகழ்வாக இருந்தது.
ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு கிராம குழுக்களுக்கு வழங்கப்பட்டு வந்த இந்த அனுமதி இந்தமுறை மருதூர் கிராம மக்களுக்கு தேரை இழுக்கும் முறை வந்துள்ள நிலையில், இன்று காலை மருதூர் பகுதியை சேர்ந்த மக்கள் சமயபுரம் கோவில் ஆணையர் கல்யாணியை முற்றுகையிட்டு இந்த முறை நாங்கள் தான் தேரை இழுக்க வேண்டும் எங்களுக்கு நீங்கள் அனுமதி தர வேண்டும் என்று தொடர்ந்து அவரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கரோனா தாக்கம் அதிகம் என்பதால் தான் இந்த தேர்த்திருவிழாவை அரசு நிறுத்தி வைத்திருந்தது. பொதுமக்கள் பக்தர்கள் கரோனாவை பெரிய பொருட்டாக எண்ணாமல் தங்களுடைய சடங்குகளும் சம்பிரதாயங்களும் முக்கியம் என்று கோவிலில் கூடியிருப்பது நோயின் தாக்கத்தை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.