பல்வேறு மாநிலங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் மாநிலங்களில் நடக்கும் தேர்தல்களில் வாக்களிக்கும் வகையில் மார்க் 3 எனப்படும் ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து கருத்துகளைக் கேட்பதற்காக அனைத்துக் கட்சி கூட்டத்திற்குத் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
தேர்தல் நேரங்களில் மக்களின் சிரமங்களைக் குறைக்க ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை நடைமுறைக்குக் கொண்டு வர மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இந்த மாதிரியைக் குறித்து அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கருத்துகளைக் கேட்பதற்கு அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 16 இல் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் கலந்து கொள்ளலாம் எனக் கூறப்பட்ட நிலையில், இதுகுறித்து கருத்துகளைத் தெரிவிக்க அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கடிதம் அனுப்பியுள்ளார்.
இந்தக் கருத்துக்கேட்புக் கூட்டத்திற்காக அதிமுகவிற்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இக்கடிதத்தை அதிமுக தலைமைக் கழகம் ஏற்க மறுத்துள்ளது. மேலும், அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியில்லை எனக் கூறி தலைமைக் கழக நிர்வாகிகள் இக்கடிதத்தை வாங்காமல் திருப்பி அனுப்பியிருந்தனர். அதற்கு, அதிமுக கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிதான் தற்போது வரை இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதனால் தான் அவ்வாறு குறிப்பிட்டு கடிதம் அனுப்பியதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மீண்டும் அந்தக் கடிதத்தை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு தபால் மூலம் அனுப்பியுள்ளது தேர்தல் ஆணையம். அதிலும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.