திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதாக சசிகலா விமர்சித்துள்ளார்.
தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, திமுகவினர் அதனை கொண்டாடி வருகின்றனர். சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி உள்ளிட்ட முக்கிய 6 திட்டங்களை அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்திருந்த சசிகலாவிடம் செய்தியாளர்கள் திமுக ஆட்சியின் ஓராண்டு சாதனை குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சசிகலா, ''திமுக ஓராண்டு ஆட்சியை நிறைவு செய்துள்ளதாக சொல்லியிருக்கிறார்கள். ஆனால் மக்கள் மனது நிறைந்தது போல் தெரியவில்லை.சட்ட ஒழுங்கு சரியாகவே இல்லை.மக்கள் ரொம்ப கஷ்டப்படுகிறார்கள்.மின்சார தட்டுப்பாடு மிக அதிகமாக இருக்கிறது.விவசாயிகளுக்கு ஒரு லட்சம் இலவச மின்சார கணக்கு கொடுத்துள்ளதாக சொல்கிறார்கள் ஆனால் மின்சாரம் வரவில்லை என்பதுதான் விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. வீட்டுக்கு 1000 ரூபாய் தருவதாக தேர்தல் அறிக்கையில் சொன்னார்கள். ஒரு வருடம் ஆகியும் அதை கொடுக்கவில்லை.முதியோர் உதவித்தொகையை இதுவரை இவர்கள் கொடுக்கவில்லை. மொத்தத்தில் மக்கள் மனதில் வெறுப்புதான் ஏற்பட்டுள்ளது. மக்கள் யாரும் திருப்தியாக இல்லை. இதுதான் ஓராண்டு ஆட்சியின் பலனாக உள்ளது என்றார்.
அப்பொழுது குறுக்கிட்ட செய்தியாளர் ஒருவர், நீங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வீர்கள்? என்று கேட்க, கண்டிப்பாக ஜெயலலிதா எப்படி ஆட்சி செய்தார்களோ அதே மாதிரி எந்த குறையும் இல்லாமல் செய்வோம்'' என்றார்.