Skip to main content

மக்கள் வாழ்வியலை நேரில் உணராத ஆட்சியாளர்கள்! -கம்யூனிஸ்ட் எம்.பி. குற்றச்சாட்டு!

Published on 27/04/2020 | Edited on 27/04/2020

 

ஊரடங்கு காலத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மனித சமுகம் எப்படி வாழ்கிறது என்பதை தத்ரூபமாக நம்மிடம் பேசுகிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் தொகுதி எம்.பி.யான திருப்பூர் சுப்பராயன், அவர் தனது தொகுதியான ஈரோடு மாவட்டம் அந்தியூர் மலை பகுதிக்கு சென்றதைதான் பேசுகிறார்.
 

"கொடிது...கொடிது... கரோனா வைரஸ் கொடியது... இப்படி சொல்லும் ஆட்சியாளர்களே.., அதிகார வர்க்கமே, நீங்கள் சொல்லும் கரோனாவை விட கொடுங் கொடியது என்ன தெரியுமா? பசியெடுத்த வயிற்றுக்கு உணவு கிடைக்காத வறுமை தான் அந்த கொடுங் கொடியது. அப்படிப்பட்ட இந்திய மக்களை நீங்கள் வாழ்நாளில் ஒரே ஒரு முறையாவது சந்தித்ததுண்டா...? சரி சந்திக்க வேண்டாம் அவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்கிற உண்மையான நிலையை கொஞ்சம் கேட்டாவது அறிந்ததுண்டா..? இதோ இப்போது நான் அவர்களோடு உள்ளேன்,
 

உடுத்திக் கொள்ள ஒரு நல்ல உடை இல்லை. குடியிருக்க அந்த குடிசைகள் பாதுகாப்பாக இல்லை. ஒரு வேளை உணவு சாப்பிட ஒவ்வொரு நேரமும் அவர்கள் அடுப்பு எரிப்பதில்லை. ஒரு நாளைக்கு ஒரு முறைதான் அந்த குடிசைகளில் அடுப்பு எரிகிறது. அது மூன்று வேளையும் அவர்களின் உணவுப்பசியை போக்க முடியாது, ஒரு வேளையோ அல்லது இரண்டு வேளையோ உண்டுவிட்டு கிடக்க வேண்டியதுதான்.
 

கரோனா வைரஸ் கொடியதுதான் அது மனித குலத்தை அச்சுறுத்தி வருவதும் உண்மைதான். மக்களுக்கான ஒரு பாதுகாப்பு ஏற்பாடாகதான் ஊரடங்கு அறிவித்தீர்கள். அது மருத்துவரீதியாக தேவையான ஒன்றுதான். இந்த நிலையில் நாம் ஆளுகிற இந்த நாட்டில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை சற்று யோசிக்க வேண்டாமா? 40 நாட்கள் அவர்கள் தொடர்ந்து முடக்கப்பட்டு உள்ளார்கள். 

நகர்ப்பகுதிகளில் இருக்கும் கொடுமைகள் ஒருபுறமென்றால் இந்த மலைப்பகுதியில் அப்பாவி மலைவாசிகள் பரிதவிக்கும் நிலையை நேரில் பார்த்தபோது கண்ணீர் வருகிறது. அவர்களுக்கு அரசு நிர்வாகம் என்பது மலை உச்சியை போல எட்டாக்கனியாகத்தானிருக்கிறது. எந்தவிதமான அடிப்படை தேவைகளையும் இந்த அரசு நிர்வாகம் அவர்களுக்கு செய்யவில்லை. எப்படி வாழ்வார்கள்? அவர்கள் எல்லோருமே உழைக்கும் மக்கள்தான்...! 
 

ஆடு, மாடு மேய்ப்பதும், காடு கழனியில் நடந்து அங்கு கிடைக்கும் வன பொருள்களை சேகரிப்பதும், விவசாயம் செய்து. கூலி வேலைக்கு சென்று இப்படி தொழிலாளர்கள் தங்கள் உழைப்பால் மட்டுமே வாழ்ந்தவர்கள். அப்படி வாழ்ந்த அவர்கள் எல்லோரையும் இந்த ஊரடங்கு முடக்கி விட்டது. 

அப்படி முடக்கப்பட்ட மக்களுக்கு என்ன நிவாரணங்களை இந்த அரசு கொடுத்துள்ளது? இந்த வைரஸ் தொற்று வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கு பாதிப்பில்லை என்று மருத்துவ உலகம் கூறுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியுள்ள உடல் இந்த வைரஸை எதிர்த்துப் போராடி வெல்லும் என்பது உண்மையானால் இந்த மக்களுக்கு எப்படி நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்? 


ஒருவேளை உணவை முழுமையாக உண்ண முடியாமல் ஏங்கும் இந்த மக்களுக்கு எப்படி நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்? நாட்டை ஆள்பவர்கள் அறிக்கைகளிலும் தங்களிடம் உள்ள பேப்பர்களை வைத்து அறிவிப்புகளை செய்யக்கூடாது. வாழ்வியல் எதார்த்தத்தை உணர்ந்து புரிந்து நடக்க வேண்டும் என்பதை இங்கு வாழும் மக்களைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். 

ஆம் எனது தொகுதிக்கு உட்பட்ட அந்தியூர் மலை பகுதியில் உள்ள பர்கூர் மலை கிராமத்தில் உள்ள தாமரைக்கரை ஊசிமலை தாளக்கரை தேவர்மலை சுண்டப்பூர் இப்படி ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்றபோதுதான் தெரிந்தது அந்த மக்களின் வேதனைகளை நேரில் காண முடிந்தது. பசியும், வறுமையும், கல்வியும், மருத்துவமும், மின்சாரமும் ஏன் இன்னும் குறைந்த அளவு சாலை வசதி கூட கிடைக்காத அந்த மக்கள் அவர்களும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் அப்படிப்பட்ட மக்களின் பசியை உணராத இந்த அரசை நினைக்கும்போது வேதனையாக உள்ளது... என நம்மிடம் உணர்வுபூர்வமாக பேசினார் எம் பி திருப்பூர் சுப்பராயன்.
 

தன்னார்வ அமைப்புகளோடு இணைந்து கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் ஒன்றிணைத்து அந்த மலைப்பகுதியில் வாழும் மலைவாசி மக்களுக்கு ஒரு குடும்பத்திற்கு 15 கிலோ அரிசியும் 4 கிலோ பருப்பு, ஆயிரம் ரூபாய் அளவிலான மளிகை பொருட்களும் சுமார் நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு எம்.பி. தலைமையிலான குழுவினர் மக்களுக்கு நேரில் வழங்கியுள்ளார்கள்.
 

 

 

சார்ந்த செய்திகள்