திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆத்துமேடு அண்ணாதிடலில் காவிரி நதிநீர் மீட்புப் போராட்ட வெற்றி விளக்கப் பொதுக்கூட்டம் நேற்றிரவு நடந்தது. இதில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதுதான் தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
அவர் பேசியது: ‘’ஜெயலலிதா வியர்வை சிந்தி, ரத்தம் சிந்தி, பணத்தைப் போட்டு எங்களை அனைத்து இடங்களிலும் வெற்றி பெறச் செய்ததைப் போலத்தான், 18 பேரையும் எம்எல்ஏவாக்கினார். ஜெயலலிதாவால் ஓரங்கட்டப்பட்ட கேடி, ரவுடிதான் தினகரன். இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். கேப்பையில் நெய் வடிகிறது என்று கேட்பவனுக்கு எங்கே போச்சு அறிவு என்று கிராமத்தில் சொல்வார்கள். இந்த 18 பேரும் போய் விட்டால் ஆட்சி நாசமாகப் போய்விடுமா?
ஜெயலலிதாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை, தினகரன் மூலம் பெற்றுக் கொண்டு, வெற்றி பெற்ற 18 எம்எல்ஏக்களும் இப்போது அதிமுகவிற்கு துரோகம் செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள், மைசூர், அமெரிக்கா என ஜாலியாக சுற்றுப்பயணம் செய்தார்கள். இதைப் பார்த்துக் கொண்டு சும்மாவா இருக்க முடியும். எம்எல்ஏக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் எடப்பாடி பழனிச்சாமி. அவர் மீது நம்பிக்கை இல்லை என்று கவர்னரிடம் மனு கொடுத்தார்கள். சட்டப்படி நோட்டீஸ் அனுப்பி ஒரு மாதம் வரை அவகாசம் கொடுத்தும், பதில் வராததால்தான், அவர்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார்’’
ஜெயலலிதா கொள்ளையடித்தார் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக அமைச்சர் ஒருவர் இதுவரை ஜெயலலிதா கொள்ளையடித்ததைப் பற்றி பேசியது இல்லை. சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறை சென்றதைப் பற்றி பேசும்போது கூட, அவர் கொள்ளையடிக்கவில்லை என்றுதான் பேசி வந்தனர். தற்போது அமைச்சர் ஒருவரே ஜெயலலிதா கொள்ளையடித்தார் என்று பேசியது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.