மகாராஷ்டிரா மாநில முதல்வர் அலுவலகத்தில் டீ செலவுக்காக மட்டும் நடப்பு ஆண்டில் ரூ.3.34 கோடி செலவழித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் தினசரி டீ குடித்ததற்கான செலவு ரூ.3.34 கோடி என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்டுள்ளது. இந்த செய்தி வெளியானதில் இருந்து எதிர்க்கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் இதுகுறித்து கேள்வியெழுப்பத் தொடங்கியுள்ளனர்.
இதுகுறித்து மும்பை காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம், ‘தேவேந்திர பட்னாவிஸ் முதல்வர் அலுவலத்தில் 2017-18 ஆண்டில் டீ வாங்குவதற்காக ரூ.3.34 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது. 2015-16 ஆம் ஆண்டில் ரூ.58 லட்சமாக இருந்த நிலையில், இத்தனை மடங்கு அது உயரவேண்டிய காரணமென்ன? நாளொன்றுக்கு 18ஆயிரத்து 591 பேர் அங்கு டீ குடிப்பதாக சொல்லப்படுகிறது. கிரீன் டீ, லெமன் டீ போன்ற வகைகளில் நம் மாநில முதல்வர் கோல்டன் டீ குடிக்கிறார் போலும். ஒரு சாதாரண விஷயத்திலேயே இவ்வளவு மோசடி என்றால், மற்ற விவகாரங்களில் என்னென்ன நடந்திருக்கும் என்பதை நினைக்கவே பயமாக உள்ளது’ என பேசியுள்ளார்.