தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான சு. திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னணி நிர்வாகிகளில் ஒருவரும் மூத்த வழக்கறிஞரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சகோதரர் ஆலந்தூர் ஆர் எஸ் பாரதியை கைது செய்திருப்பது மிகுந்த கண்டனத்துக்குரியது.
எதிர்க்கட்சியின் குரலை நெறிக்கும் விதத்திலும் பழிவாங்கும் விதத்திலும் அச்சுறுத்தும் விதத்திலும் கருத்து சுதந்திரத்திற்கு விரோதமாக காவல்துறையை பயன்படுத்தி வழக்குகள் பதிவு செய்வதும் கைது செய்வதும் சர்வாதிகார நடவடிக்கையாகும்.
கருத்துக்களை கருத்துக்களால் சந்திக்க வேண்டுமே தவிர காவல்துறையை கொண்டு வழக்குகள் தொடர்ந்து சந்திக்க நினைப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது. அரசின் தோல்விகளை ஊழல்களை மறைக்கவும் திசை திருப்பவும் இதுபோன்ற சித்து விளையாட்டுகளில் தமிழக அரசு ஈடுபடுவது மிகுந்த கண்டனத்திற்குரியது. இந்த வழக்கை திரும்பப் பெற வேண்டும் என தமிழக அரசை வற்புறுத்திகிறேன்'' என கூறியுள்ளார்.