கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன், ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரோனா தொற்று நோய் பாதிப்பிலிருந்து மக்களைக் காப்பாற்ற அனைத்துத் தரப்பும் பெரும் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகமும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நிவாரணப் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டிருக்கிறார்கள்.
இந்த நேரத்தில் பழைய காரணங்களைச் சொல்லி தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியைக் கைது செய்திருப்பது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். கண்டிக்கப்பட வேண்டிய செயல். ஆர்.எஸ்.பாரதி அரசாங்கத்தில் நடக்கின்ற குற்றம் குறைகளை எடுத்துச் சொல்லி தொடர்ந்து வழக்கு போட்டு வருவது தான் கைதுக்கான காரணம்.
ஜனநாயகத்தில் கேள்வி கேட்கின்ற எதிர்க்கட்சிக்குப் பதில் சொல்ல வேண்டியது ஆளுங்கட்சியினுடைய கடமை. இதைப்போன்ற பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஜனநாயகம் ஆகாது. கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு, தான் செய்ததுதான் சரி என்ற நிலைப்பாட்டில் இருப்பது சரியாக இருக்காது. எதிர்க்கட்சிகளாக இருந்தாலும், சமூக ஆர்வலர்களாக இருந்தாலும் ஆலோசனைகளைச் சொல்லும் போது அதை ஆக்கப்பூர்வமாக எடுத்துக்கொண்டு செயல்படுத்த முன்வர வேண்டும்.
இதுபோன்ற பழிவாங்கும் கைது நடவடிக்கைகள் தொடர்ந்தால் மக்கள் மத்தியில் அமைதியின்மை ஏற்படும். தி.மு.க.வின் சிறப்பான செயல்பாடுகள் தினசரி செய்திகளாக வருவதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் அதைத் திசை திருப்புவதற்கான முயற்சியாகவே இந்தக் கைதைப் பார்க்கின்றோம். தமிழக அரசு இதுபோன்ற நடவடிக்கைகளில் கவனம் செலுத்தாமல் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.