கந்த சஷ்டி விவகாரத்தில் முருகரை பழித்து பேசியது மிகவும் கண்டிக்கத்தக்கது என்று தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கந்த சஷ்டி விவகாரத்தில் முருகரை பழித்து பேசியது மிகவும் கண்டிக்கத்தக்கது. கறுப்பர் கூட்டம் அமைப்புக்கு திமுக ஆதரவு அளிப்பதாக ட்விட்டரில் போலி தகவலை பதிவிட்டுள்ளனர். தற்போது பிரச்சனைகளை திசைத்திருப்பும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.
மு.க.ஸ்டாலின் பெயரில் போலியான செய்தி ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ளது. அவர் மீது திட்டமிட்டு அவதூறு பரப்பப்படுகிறது. மீண்டும் புகாரளித்து காவல்துறை நடவடிக்கை எடுக்காவிடில் நீதிமன்றத்தை நாடுவோம். தமிழகத்தில் பேரவைத் தேர்தல் வர இருக்கும் நிலையில் சிலர் திட்டமிட்டு திமுகவுக்கு எதிராக பரப்புரை மேற்கொள்கிறார்கள். இந்துக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த இப்படி அற்பத்தனமான செயலை செய்கின்றனர்.
கலைஞர் ஆட்சியில் இந்துக்கோவில்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட்டன. அனைத்து மத தலைவர்களும் திமுகவுடன் தொடர்பில் இருந்துள்ளனர். திமுகவில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் இந்துக்களாக உள்ளனர். கலைஞர் ஆட்சியில் இருந்தபோது கும்பகோணம் மகாமகம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருவாரூர் தேரை ஓட வைத்தவர் மறைந்த தி.மு.க. தலைவர் கலைஞர்.
இந்து, கிறித்துவ, முஸ்லிம் மக்கள் மு.க.ஸ்டாலின் பின்பு இருப்பதை மத்திய அரசின் உளவு துறை வாயிலாக அறிந்து கொண்டவர்கள் திட்டமிட்டே இதுபோன்ற குழப்பங்களை ஏற்படுத்தி வருகின்றனர். அண்ணா கூறியது போல், ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற கொள்கை கோட்பாட்டோடு இயங்கக்கூடியகட்சி திமுக.
நாளை முழு அடைப்பு என்பதால் நாளை மறுதினம் திமுக சார்பில் வழக்கறிஞரோடு ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்க உள்ளோம், குள்ளநரி கூட்டம் தமிழகத்தில் நுழைய உள்ளது. தமிழகத்தில் 100 க்கு 100 க்கு காவிக்கூட்டத்தை விரட்டியடித்தவர்கள். எனவே குறுக்குவழியில் நுழைய திமுக கூட்டணிக்கட்சிகள் அனுமதிக்காது” இவ்வாறு கூறினார்.