Skip to main content

“அமலாக்கத்துறை சோதனை எனக்கானது அல்ல” - ஆதவ் அர்ஜூனா விளக்கம்!

Published on 16/11/2024 | Edited on 16/11/2024
Aadhav Arjuna explains about Enforcement directorate raid

சென்னை மற்றும் கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் கடந்த 14ஆம் தேதி அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகம் மட்டுமல்லாமல் சிக்கிம், அசாம் போன்ற மாநிலங்களில் மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் தொடர்ந்து 3 நாட்களாக அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அமலாக்கத்துறை சோதனை காரணமாக மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

லாட்டரி அதிபர் மார்ட்டினை தொடர்ந்து, மார்ட்டினின் மருமகனும், விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளருமான ஆதவ் அர்ஜூனாவின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களிலும் கடந்த இரண்டு நாட்களாக அமலாக்கத்துறை சோதனை நடத்தி வந்த நிலையில், இன்று(16-11-24) நிறைவு பெற்றது. இந்த சோதனையில், இரண்டு பைகளில் முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளதாக தகவல் வெளியானது. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்காக, ஆதவ் அர்ஜூனா ஏதேனும் நிதியுதவி வழங்கியிருக்கிறாரா? என்பதன் அடிப்படையில் தான் இந்த சோதனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. 

அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றதையடுத்து ஆதவ் அர்ஜூனா, இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “எனது இல்லத்தில் அமலாக்கத்துறையின் சார்பாகக் கடந்த இரண்டு நாட்களாக நடந்த சோதனை குறித்த செய்திகள்  ஊடகங்களில் வெளியானது. அரசியல் பொதுவாழ்வில் ஈடுபட முடிவெடுத்தபோதே நான் எனது தொழில் நிறுவனங்களின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகிவிட்டேன். தற்போது நான் வருவாய் ஈட்டக்கூடிய எந்த தொழிலிலோ, அது சார்ந்த பொறுப்பிலோ இல்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். அமலாக்கத்துறை சோதனை என்பது எனக்கானது அல்ல, அமலாக்கத்துறையின் சோதனை ஆணை (SEARCH ORDER) எனது பெயரில் இல்லை என்பதையும், அரசின் விசாரணை அமைப்புகளில் என்மீது எந்த புகார்களும், வழக்குகளும்  இல்லை என்பதையும் ஊடகங்களுக்கும், தோழர்களுக்கும் நான் பதிவு செய்ய விரும்புகிறேன். 

எக்காலத்திலும் சட்டத்திற்கு எதிரான எந்த பணிகளிலும் என்னை ஈடுபடுத்திக் கொண்டதில்லை. அந்த வகையில், இச்சோதனையின் போது அதிகாரிகள் கேட்ட அனைத்து சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் நம் தரப்பில்  உரிய முழுமையான விளக்கங்கள் சட்டரீதியாக அளிக்கப்பட்டு சோதனை முழுமையாக நிறைவு பெற்றுள்ளது. இந்த சோதனை குறித்து  சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் பத்திரிக்கையாளர் அல்லாத நபர்கள், அதிகார வர்க்கத்திற்கு விலைபோனவர்கள் மற்றும் சித்தாந்த ரீதியாக எங்களுடன் முரண்பட்டவர்கள் மூலம் எனக்கு எதிரான அவதூறான கட்டுக்கதைகளும், உண்மைக்கு மாறான தகவல்களும் கடந்த இரண்டு நாட்களாகப் பரப்பப்பட்டு வருகிறது.

அரசியல் அறிவியல் மாணவனாக பதினைந்து வயதிலே சமத்துவ சித்தாந்த கருத்தியலில் பயணிக்கத் துவங்கியவன் நான். அந்த பயணத்தின் தொடர்ச்சியாகத் தமிழ்நாட்டில் நடந்த  இரண்டு சட்டமன்ற தேர்தல்கள் மற்றும் இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களின் யுத்த களத்தில், தேர்தல் வியூக வகுப்பாளராக கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில் கொண்ட கொள்கைக்காகவும், மக்களுக்கான அரசை உருவாக்கவும் களப்பணியாற்றியுள்ளேன். அந்த பயணத்தின் நீட்சியாக இப்போது நேரடி அரசியலிலும் களமிறங்கியுள்ள எனக்கு இது போன்றவர்களின் எதிர்மறையான கருத்துக்கள் எனது அரசியல் சிந்தனைக்கு மேலும் உத்வேகம் அளிக்குமே தவிர, ஒருபோதும் எனது அரசியல் பயணத்திற்குத் தடையாக மாறாது. “என் மடியில் கனமில்லை, அதனால் வழியில் பயமில்லை.” புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் சமத்துவ சித்தாந்தத்தின் வழியில் மத பெரும்பான்மைவாதம், சாதிய ஆதிக்கம், ஊழல் ஆகியவற்றுக்கு எதிராக, தனிமனித சுதந்திரம், சமூக நீதி, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அதிகாரம் உள்ளிட்டவற்றிற்கான எனது பிரச்சாரப் பயணத்தில் எந்தவித சமரசத்திற்கும் இடம் தராமல் தேர்தல் அரசியலில் பேரறிஞர் அண்ணா பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டபோதும் கொண்ட கொள்கைகளில் கவனம் சிதறாமல் வெற்றி பெற்றதை போல புதிய அரசியல் பாதையை உருவாக்குவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்