வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வரும் நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக வரும் 15ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தரமணியில் ஆய்வில் ஈடுபட்ட தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது 'இன்று காலை சென்னையில் பள்ளி கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என தகவல் வெளியான நிலையில் சிறிது நேரத்திலேயே சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை என்ற அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்புகளுக்கான தாமதம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த உதயநிதி,'மாணவர்கள் விடுமுறையால் சந்தோஷமாக இருக்கிறார்களா.. நேற்று மாலையில் இருந்தே மழை வரப்போகிறது என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் மழையே வரவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக தான் மழை தொடர்ந்தது. அதனால் ஒரு சின்ன குழப்பம் இருந்தது. நள்ளிரவு 2 மணியில் இருந்து நல்ல மழை இருந்தது. அதனால் அந்த முடிவு எடுப்பதற்கு கொஞ்சம் தாமதமானது. கண்டிப்பாக தெரிய மழை பெய்துள்ளது. அதனால் சென்னை பள்ளிகளுக்கு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. மெட்ரோ பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. அதுவும் முக்கியம். அவர்களுடனும் நாங்கள் பேசி இருக்கிறோம். அவர்களுடைய பணியை பாதிக்காத அளவிற்கு அங்கு ஏற்படுத்த வேண்டிய பாதுகாப்பு எச்சரிக்கைகள் என்று குறித்து பேசி இருக்கிறோம். அதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்''என்றார்.