Skip to main content

அழைப்பு விடுத்த அதிமுக; நச் பதிலடி கொடுத்த திருமாவளவன் எம்.பி.!

Published on 17/11/2024 | Edited on 17/11/2024
ADMK made the call Thirumavalavan MP gave a strong response

இந்தியத் தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றிற்கு பதிலாக மத்திய அரசு பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா, பாரதிய சாக்ஷிய அதினியம் என 3 புதிய குற்றவியல் சட்டங்களைக் கொண்டு வந்தது.  இந்த 3 சட்டங்களும் கடந்த ஜூலை 1ஆம் தேதி (01.07.2024) முதல் அமலுக்கு வந்துள்ளன. அதே சமயம் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக சமஸ்கிருதத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு நாடாளுமன்றத்தில் முறையான விவாதங்கள் ஏதுமின்றியும் மாநிலங்களின் கருத்துக்களைக் கேட்காமலும் அவசர அவசரமாகக் கொண்டு வரப்பட்டுள்ள இச்சட்டங்களின் பல்வேறு பிரிவுகளை எதிர்த்து நாடெங்கும் எதிர்ப்புகளும் போராட்டங்களும் நடைபெற்றன.

இதற்கிடையே மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களில் மாநில அளவில் திருத்தங்கள் மேற்கொள்ள ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையில் ஒரு நபர் குழுவை அமைத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் இந்த 3 குற்றவியல் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழகத்தில் இருக்கக்கூடிய வழக்கறிஞர்கள் சார்பாக இணைந்து அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளை ஒன்றிணைத்து சென்னையில் உள்ள காமராஜர் அரங்கில் மாநாடு இன்று (17.11.2024) நடைபெற்றது.

இந்த மாநாட்டில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்,  கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி ராஜா, அதிமுக சட்டத்துறை செயலாளர் இன்பத்துரை, தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் என அரசியல் கட்சியின் தலைவர்களும், பிரதிநிதிகளும் இந்த மாநாட்டில்  கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில், அதிமுக சட்டத்துறை செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இன்பத்துரை பேசுகையில், “திருமாவளவன் எங்குச் செல்வார் எனத் தமிழ்நாடே காத்துக் கொண்டிருக்கிறது. திருமாவளவன் நம்மோடு தான் இருக்கிறார். அரசியல் பேச வரவில்லை. வழக்கறிஞர்கள் எங்கிருந்தாலும் அங்கு திருமாவளவன் வருவார் என்று தான் சொல்கிறேன். வழக்கறிஞர் திருமாவளவன் நம்மோடு தான் இருக்கிறார்” எனப் பேசினார்.

அதனைத் தொடர்ந்து வி.சி.க. நிறுவனத் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் பேசுகையில், “மக்களோடு இருப்போம்.  கட்சிகளோடு அல்ல. இதுதான் இன்பதுரைக்கான பதில். மக்களோடு போராடுகிறவர்கள் யாராக இருந்தாலும் அடையாளம் முக்கியமில்லை. கட்சி அடையாளம், சாதி அடையாளம், மத அடையாளம் என  எல்லாவற்றையும் தாண்டி சிந்திக்கவும் செயல்படவும் பக்கபட வேண்டும் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள். யார் எந்த கட்சியிலும் இருக்கலாம். அவர்களை எதிர்கொள்ளும்போது கைகுலுக்கிக் கொள்ளலாம். அதில் ஒன்றும் தவறில்லை. உங்கள் கொள்கை உங்களுக்கு. எங்கள் கொள்கை எங்களுக்கு. அது அரசியல் கொள்கை. தேர்தல் அரசியல் என்பது யுக்தி” எனப் பேசினார். 

சார்ந்த செய்திகள்