தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனரும் மூத்த அரசியல்வாதியுமான சரத்பவார், தான் வகித்து வரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக இந்த மாதம் 2 ஆம் தேதி அறிவித்தார். இந்த அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தொடர்ந்து பல்வேறு தலைவர்களும் சரத்பவார் தனது முடிவை மாற்ற வேண்டும் எனக் கூறி வந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சரத்பவார் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.
இது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவை சரத்பவார் மறுபரிசீலனை செய்ய வேண்டும். நாட்டில் மதச்சார்பற்ற கூட்டணியை வலுப்படுத்துவதில் முக்கியமான தலைவர்களில் ஒருவர் சரத்பவார். இந்த முடிவை மறுபரிசீலனை செய்து தேசியவாத காங்கிரஸ் தலைவராக சரத்பவார் நீடிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு நாடாளுமன்ற மக்களவையில் 5 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 4 உறுப்பினர்களும் மகாராஷ்டிர மாநில சட்டமன்றத்தில் 54 சட்டமன்ற உறுப்பினர்களும், கேரளாவில் 2 சட்டமன்ற உறுப்பினர்களும், குஜராத்தில் ஒரு சட்டமன்ற உறுப்பினரும் உள்ளனர். அண்மையில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தேசியக் கட்சி என்ற அந்தஸ்தை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்த சரத்பவார், ராஜினாமா முடிவைத் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார். ராஜினாமா முடிவைத் திரும்பப் பெற்றதால் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக சரத்பவார் நீடிப்பார்.