சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இன்றைய நிகழ்வுகள் காலை (26.06.2024) வழக்கம் போல் தொடங்கியது. முன்னதாக கள்ளக்குறிச்சி சம்பவத்தைக் கண்டித்து முன்னதாக இன்றும் கருப்பு சட்டை அணிந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்கு வந்திருந்தனர். கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த கோரி அதிமுக உறுப்பினர்கள் நான்காவது நாளாக இன்றும் அமளியில் ஈடுபட்டனர். அப்போது கேள்வி நேரத்திற்கு பின்பு பேச அனுமதி தருகிறேன் என சபாநாயகர் அப்பாவு சட்டப்பேரவை விதிகளை சுட்டிக்காட்டி பேசினார். அதன் பின்பும் தொடர்ந்து அதிமுகவினர் இருக்கையில் அமராமல் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற அவை காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். மேலும் அதிமுக உறுப்பினர்கள் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.
இந்நிலையில் சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது அவர் பேசுகையில், “சட்டப்பேரவை விதி 56இன் கீழ் பேரவையின் பிற நிகழ்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். இது தொடர்பாக காலையே சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுவை சந்தித்து கோரிக்கை அளித்தோம். விதிப்படி வந்தால் கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக பேசலாம் என பேரவைத் தலைவர் சொன்னார். இருப்பினும். விதியை பின்பற்றி பேசினாலும் சபாநாயகர் அப்பாவு பேச அனுமதி தர மறுக்கிறார். சபாநாயகர் அப்பாவு நடுநிலையோடு இல்லை. பிரச்னையின் ஆழத்தை கருதி சபாநாயகர் அப்பாவு நேரம் கொடுத்திருக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சி பிரச்னை குறித்து விவாதிக்க அனுமதி மறுத்து அதிமுக உறுப்பினர்களை வெளியேற்றியது வேதனை அளிக்கிறது. கள்ளக்குறிச்சி பிரச்னை குறித்து அவையில் எதிர்க்கட்சி பேசுவதை ஆளும்கட்சி விரும்பவில்லை. கள்ளக்குறிச்சி பிரச்னையை விட முக்கியமான பிரச்னை வேறு என்ன இருக்கிறது?. சட்டப்பேரவையில் ஒரே நாளில் 5 மானியக் கோரிக்கை மீது எப்படி விவாதம் நடத்த முடியும்?. சாதிவாரி கணக்கெடுப்பு தீர்மானத்திற்காக வெளியேறினோம் என சபாநாயகர் கூறுவது தவறு. மக்கள் பிரச்னைகளை மூடி மறைக்கவே சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வருவதால் சாதிவாரி கணக்கெடுப்பு எனக் கூறுகின்றனர்.
கேள்வி நேரத்தின் போது எங்களை வெளியேற்றி விட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் கொடுக்கிறார். எதிர்க்கட்சிக்கு ஒரு நியாயம், ஆளுங்கட்சிக்கு ஒரு நியாயம் என செயல்படுகின்றனர். அதிமுக ஆட்சிக் காலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டது. சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து திமுக அரசு பேச வாக்கு அரசியல் தான் காரணம். விக்கிரவாண்டி இடைத்தேர்தலை கருத்தில் கொண்டு தீர்மானம் கொண்டு வருகிறார்கள். சபாநாயகர் நாற்காலியில் அமர்ந்துகொண்டு அரசியல் பேசக்கூடாது. வேண்டுமென்றால் சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியல் பேசட்டும்” எனத் தெரிவித்தார்.