சட்டமன்றத் தேர்தலில், கடந்த முறை அதிமுக கூட்டணியில் இருந்த பலர் வெளியேறிவிட்ட நிலையில், தற்போது பாமக, பாஜக, தமாகா உள்ளிட்ட பல கட்சிகளுடன் கூட்டணி முடிவு செய்யப்பட்டுள்ளது. தேமுதிக இன்னும் இழுபறியில் உள்ளது. இந்த நிலையில் அதிமுக வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் வெளியான நிலையில், அடுத்த பட்டியலை வெளியிட அதிமுக தலைமை தயாராகிவருகிறது.
ஒபிஎஸ், தனது தர்மயுத்த காலத்தில் தன்னுடன் வந்தவர்கள் 4 ஆண்டுகளாக ஒதுங்கி இருந்த நிலையில், கடந்த சில நாட்களாக அவர்களை தொடர்புகொண்டு அந்தந்த மா.செ.க்களை சந்திக்கச் சொன்னதோடு, அதிமுக போட்டியிடும் மொத்த தொகுதிகளில் பாதி தனது ஆதரவாளர்களுக்கு வேண்டும் என்று போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.
மற்றொரு பக்கம் அதிமுக விருப்ப மனு வாங்கிவிட்டு, அதில் உளவுத்துறை மற்றும் தனியார் ஏஜென்சி கொடுத்துள்ள 3 பேர் பட்டியலை வைத்து, அதிலிருந்து வேட்பாளர்களை டிக் செய்யுங்கள் என்று அந்தந்த மாவட்டச் செயலாளர்களுக்கு சொல்லப்பட்டுள்ளதாம். அந்தப் பட்டியலை பார்த்த பல மா.செ.க்களும் இந்தப் பட்டியலில் உள்ளவர்களை வேட்பாளர் ஆக்கினால் பலர் தோல்வியடைவார்கள். அதனால், எங்களிடம் உள்ள பட்டியல்படி வேட்பாளர்களை அறிவிக்க வேண்டும் என்று முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர். இதனால் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிட கால தாமதம் ஏற்படுகிறது.
இதுகுறித்து அதிமுகவினர் கூறும்போது, “ஒவ்வொரு தேர்தலிலும் திமுக, வேட்பாளர்கள் தேர்விலேயே தோற்றுவிடுகிறார்கள். அதுதான் அதிமுகவுக்கு சாதகமாக இருந்து வந்தது. இந்த முறை அதிமுக வேட்பாளர் பட்டியலையும் அதேபோல் தயாரித்திருப்பதால்தான் இத்தனை எதிர்ப்புகள்” என்கிறார்கள்.