நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம், வேட்பு மனுத்தாக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் விஜய் வசந்த்தையும், திருநெல்வேலி மக்களவை தொகுதிக்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ராபர்ட் புரூஸையும், விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் டாக்டர் தாரஹாய் குத்பர்ட்டினையும் ஆதரித்து நாங்குநேரியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “மீண்டும் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தால், அமைதியான இந்தியா அமளியான இந்தியாவாக மாறும். தென் மாவட்ட வெள்ள பாதிப்புக்கு பிரதமர் மோடி நிதி உதவியை வழங்கவில்லை. இரண்டு இயற்கை பேரிடர்கள் ஏற்பட்ட போதும் தமிழகத்திற்கு ஒரு காசு கூட பிரதமர் மோடி தரவில்லை. தமிழகத்தை வெறுக்காத, தமிழர்களை மதிக்கக்கூடியவர் மத்தியில் பிரதமராக வர வேண்டும். பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பது எதிர்கால சந்ததியினருக்கு செய்யும் துரோகம் என்பதை விளக்க வேண்டும். பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பது அவமானம் என்று வாக்காளர்களிடம் எடுத்துரைக்க வேண்டும்.
பா.ஜ.க. அரசு ஓரவஞ்சனையுடன் செயல்படுகிறது. வெள்ள நிவாரணத்திற்கு நிதி கேட்டால் பிச்சை என்று ஏளனம் செய்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். மற்றொரு மத்திய அமைச்சர் தமிழர்களை தீவிரவாதியாக சித்தரித்து பேசுகிறார். தமிழகத்திற்கு 10 ஆண்டுகளில் ஏதேனும் சிறப்பு திட்டங்களை பிரதமர் மோடி நிறைவேற்றி இருக்கிறாரா? இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க மத்திய அரசு ஒன்றும் செய்யவில்லை. இலங்கையை பார்த்து பிரதமர் மோடி பயப்படுகிறார். கடந்த 10 ஆண்டுகளில் மீனவர்கள் மீது அதிகளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மோடி அரசின் ஒரே நாடு, ஒரே தேர்தல் என பல்வேறு 'ஒரே' திட்டங்களால் ஒருவர்தான் பயனடைகிறார். தினமும் காங்கிரஸ் தலைவர்களை எப்படியெல்லாம் வசைபாடலாம் என்பது தான் மோடியின் வேலை ஆகும்.
நீங்கள் அளிக்கிற வாக்குதான் இந்தியாவின் அடுத்த பிரதமராக ஒரு ஜனநாயகவாதி வருவதை உறுதி செய்யப் போகிறது. தமிழ்நாட்டை மதிக்கிற தமிழர்களை வெறுக்காத ஒருவர் பிரதமர் ஆகணும்னா அது உங்க கையில்தான் இருக்கிறது. அதற்கு பிரதமர் மோடி தோற்கடிக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டிற்கு வெள்ள நிவாரண நிதி தராத மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். தேர்தலில் பா.ஜ.க.- அ.தி.மு.க. இடையே கள்ளக் கூட்டணி நிலவுகிறது. திருச்சியில் நடைபெற்ற அதிமுக பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் மோடி அரசு மீது எடப்பாடி பழனிசாமி எந்த விமர்சனமும் செய்யவில்லை. பா.ஜ.க.வுக்கு எதிரான வாக்குகளை பிரிக்கவே அ.தி.மு.க. வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர் ” எனப் பேசினார்.