டெல்லியில் நான்காவது நாளாக பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) நடத்திய தேர்வில் வினாத்தாள் கசிந்ததாகக் கூறி தேர்வெழுதியவர்களும் மாணவர் அமைப்புகளும் போராட்டம் நடத்திவருகின்றனர்.
மத்திய அமைச்சரவை மற்றும் அதன் கீழுள்ள அமைப்புகளுக்கான நான் கெஜட்டட் பணியிடங்களுக்கான பணியாளர்கள் தேர்வுக்காக பிப்ரவரி 17 முதல் 21 வரை நான்கு தினங்கள் நிர்ணயிக்கப்பட்டிருந்தன. கிட்டத்தட்ட 9000-க்கும் அதிகமான பணியிடங்களுக்கான பணியாளர்களை இத்தேர்வு மூலம் தேர்வுசெய்ய திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், கேள்வித்தாள் கசிந்ததாக சமூக ஊடகங்களில் புகைப்படங்களுடன் ஆதாரங்கள் வெளிப்பட்டன. இதையடுத்து மாணவர்கள் தேர்வை ரத்துசெய்யக் கோரியும், சி.பி.ஐ. விசாரணை நடத்தவேண்டுமெனவும் கோரிக்கை வைக்கத் தொடங்கினர். மாணவர்களின் கிளர்ச்சியை அடுத்து, 21-ஆம் தேதி நடக்கவிருந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டு மார்ச் 9-ஆம் தேதி நடைபெறுமென ஆணையம் அறிவித்தது.
இந்நிலையில் காங்கிரஸின் செய்தித் தொடர்பு பொறுப்பாளரான ரந்தீப் சுர்ஜீவாலா, போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்வதோடு சி.பி.ஐ. விசாரணைக்கும் பா.ஜ. அரசு உத்தரவிடவேண்டுமென தெரிவித்தார். மேலும் பா.ஜ.க. அரசின் மற்றுமொரு வியாபம் ஊழல் என இதைக் குறிப்பிட்ட அவர், பா.ஜ.க. அரசு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரவேண்டுமே தவிர, வேலைகளை விற்பனை செய்யக்கூடாதெனவும் விமர்சித்தார்.
மாணவர்களின் போராட்டத்தில் இன்று காலை அண்ணா ஹசாரேவும் கலந்துகொண்டதோடு, சி.பி.ஐ. விசாரணை தேவை என குரல்கொடுத்தார்.