விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சிவகாசி மாநகராட்சி, சிவகாசி மேற்கு, கிழக்கு பகுதி கழகம் மற்றும் சிவகாசி வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு ஒன்றிய கழகங்கள் சார்பில், போதைப் பொருட்களின் புழக்கத்தை தமிழ்நாடு அரசு தடுக்கத் தவறியதாகக் கூறி, சிவகாசியில் மனிதச்சங்கிலி போராட்டம் நடத்தினார்கள். போராட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி.
அவர் பேசியதாவது; “இன்றைக்கு தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை நடக்கிறது. போதைப் பொருட்களை அரசின் ஆசீர்வாதத்தோடு விற்பதாக தகவல் வந்துகொண்டிருக்கிறது. ஆகவே, போதைப்பொருட்களைத் தடுக்காத இந்த ஆட்சியைக் கண்டித்து, தமிழ்நாடு முழுக்க மாநகராட்சி பகுதி கழகங்கள், நகராட்சி கழகங்கள், ஒன்றியங்கள், பேரூராட்சிகளில் மனிதச்சங்கிலி போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறோம். இந்த மனிதச்சங்கிலி மூலமாக, மக்களை சொல்லொண்ணா துன்பத்திற்கு ஆளாக்கியியிருக்கின்ற, இளைஞர்களைச் சீரழிக்கின்ற கஞ்சாப் புழக்கத்தை தடுத்துநிறுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுவரையிலும் நடவடிக்கை எடுக்காத தி.மு.க. ஆட்சியைக் கண்டித்து, இங்கே மனிதச் சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. நான் கோஷங்களை எழுப்புகின்றேன். தி.மு.க. ஆட்சியைக் கண்டித்து நீங்களும் அதே கோஷங்களை எழுப்புங்கள்” எனப் பேசிவிட்டு கோஷங்களை எழுப்பினார்.