தேனி பாராளுமன்றத் தொகுதியில் பி.ஜே.பி. கூட்டணி சார்பில் அ.ம.மு.க. வேட்பாளராக டி.டி.வி. தினகரன் போட்டியிடுவதால் ஓ.பி.எஸ்.ஸின் முழு ஆதரவும் டிடிவிக்கு இருக்கிறது. அதோடு டிடிவியும் நான் போட்டி போடுகிறேன் என்று தெரிந்து தான் இத்தொகுதியை ஓ.பி.எஸ்.ஸும் அவரது மகன் ஓ.பி.ஆர்.ரும் எனக்காக விட்டுக் கொடுத்தும் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு ஓபிஎஸ்ஸும் டி.டி.வி.யும் தேர்தல் களத்தில் நெருக்கமாக இருந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தான் வேட்புமனு தாக்கலின் இறுதி நாளான நேற்று 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய டிடிவி தினகரன் மதியத்துக்கு மேல் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வருவதாக இருந்தது. இந்த விஷயம் ஓபிஎஸ்-க்கு தெரியவே, மதியம் ஒன்னேகால் மணிக்கு எல்லாம் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தவர் அலுவலக வளாகத்தில் உள்ள மரத்தடியில் நின்று கொண்டு டிடிவியை வரவேற்க காத்துக் கிடந்தார். அவருடன் ஆதரவாளர்களான செல்லமுத்து மற்றும் சையதுகான் ஆகியோர் இருந்தனர்.
அப்போது நாம் முன்னாள் முதல்வரான ஓபிஎஸ்ஸிடம் சென்று நம்மை நக்கீரன் நிருபர் என்று அறிமுகப்படுத்திய உடனே ஆசிரியர் நல்லா இருக்காரா? என்று கேட்டார். அதைத் தொடர்ந்து நாமும் ஆசிரியர் நலமாக இருக்கிறார் என்று கூறியவாறே தொகுதியின் தேர்தல் பணி எந்த அளவுக்கு இருக்கிறது என்று கேட்டபோது, “நான் போட்டி போடும் அந்த தொகுதியில் பிரதமர் மோடி தான் போட்டிப் போடுவதாக இருந்ததால் அங்குள்ள கட்சியினர் தொகுதியை ஒரு கட்டுக்கோப்பாக பிரதமருக்காக தயார் செய்தும் வைத்திருந்தனர். ஆனால் பிரதமர் இங்கே போட்டி போடவில்லை என்பதால் என்னையத்தான் நிற்க சொன்னார். அதன்பேரில் தான் போட்டி போடுகிறேன்” என்றவரிடம் அத்தொகுதியில் முக்குலத்தோர் சமூக ஓட்டுக்கள் அதிகமாக இருக்கிறதா என்று கேட்டபோது, அத்தொகுதியில் மொத்தம் பதினாறு லட்சம் ஓட்டுகள் இருக்கிறது. இதில் சிறுபான்மை சமூக ஓட்டுகள் இரண்டு லட்சம் இருப்பதாக தெரிகிறது. அதுபோல் முக்குலத்தோர் சமூக ஓட்டுகள் ஆறு லட்சத்திற்கு மேல் இருப்பதாக தெரிகிறது. மீதி மற்ற சமூக மக்கள் இருக்கிறார்கள் என்றவரிடம், உங்களுடைய வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்று கேட்டதற்கு என்னுடைய வெற்றி உறுதி இறைவன் இருக்கிறார்” என்றார்.
உங்களை பெயரிலேயே ஐந்து சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்து இருக்கிறார்கள். அது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, “நான் வெற்றி பெறக் கூடாது என்பதற்காகவே எடப்பாடி செய்த சதி. அதையும் முறியடிக்க தயாராக இருக்கிறேன்” என்றார். தொடர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க.வினர் கூட டிடிவிக்கு மறைமுகமாக சப்போர்ட் பண்ண இருப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறதே என்று கேட்டதற்கு சிரித்துக் கொண்டே “அதுவும் நடக்கலாம் நான் சொன்னது போல் தமிழகம் முழுவதுமே அ.தி.மு.க. படுதோல்வி அடையும்” என்று சொல்லிக் கொண்டு இருந்தார்.
அப்போது தேர்தல் பிரச்சார வாகனத்தில் ஆட்சியர் அலுவலகத்திற்குள் இரண்டேகால் மணிக்கு டிடிவி வந்தார். அவரை ஓபிஎஸ் சால்வை அணிவித்து வரவேற்றார். அதன்பின் ஓ.பி.எஸ். தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் மரத்தடியிலேயே நின்றார். அப்போது பயனாளிகளுக்காக போடப்பட்டிருந்த இரும்பு சேரில் ஓ.பி.எஸ் உடன் வந்த இருவரும் உட்கார்ந்து இருந்தனர். அதைத் தொடர்ந்து டிடிவி தினகரன் தனது வேட்புமனுவை தேர்தல் அதிகாரியான ஆட்சியரிடம் தாக்கல் செய்துவிட்டு வந்தார். வந்தவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியும் கொடுத்தார். அதுவரை ஓபிஎஸ் டிடிவியுடனே நின்றுவிட்டு டிடிவியை பிரச்சார வேனில் திரும்ப வழியனுப்பி விட்டுத்தான் திரும்பினார்.