2023 ஆம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர், ஆளுநர் ரவி உரையுடன் 9ஆம் தேதி தொடங்கியது. முதல் நாள் கூட்டத் தொடரில் ஆளுநர் படிக்கும்போது, உரையில் சில வார்த்தைகளைத் தவிர்த்துவிட்டுப் படித்ததற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, முதல்வர் உரையாற்றிக் கொண்டிருக்கும் பொழுதே ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறியது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
ஆளுநர் உரையாற்றும்போது அரசு தயாரித்த உரையை முழுமையாகப் படிக்காமல் சில வார்த்தைகளைத் தவிர்த்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக, 'திராவிட மாடல்' என்ற வார்த்தை ஆளுநரால் தவிர்க்கப்பட்டுள்ளது. அதேபோல் 'தமிழ்நாடு கவர்ன்மென்ட்' என்ற வார்த்தைக்குப் பதில் 'திஸ் கவர்ட்மென்ட்' என மாற்றியுள்ளார். மேலும் பெரியார், அண்ணா, காமராஜர், கலைஞர், அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்கள் பெயரும் தவிர்க்கப்பட்டுள்ளது. இதனால் பேரவையில் இருந்து திமுக கூட்டணிக் கட்சிகள் வெளியேறின. தொடர்ந்து தமிழக முதல்வர் பேசிக்கொண்டிருக்கும்போதே சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் வெளியேறினார்.
இதனைத் தொடர்ந்து கடந்த சில தினங்கள் முன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வெளியிட்டிருந்த அறிக்கையில் ஆளுநருக்கெதிராக ஜனவரி 13 அன்று விசிக சார்பில் ஆளுநர் மாளிகை முன் முற்றுகைப் போராட்டம் நடத்தப்போவதாகக் கூறியிருந்தார்.
இந்நிலையில், ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடத்துவதற்கு சென்னை சின்னமலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 700க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். இதில் “சனாதன சக்தியே, ஆர்.என். ரவியே, ஆர்.எஸ்.எஸ் தொண்டரே திரும்பிப் போ தமிழ்நாட்டில் இடமில்லை” போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டது.