வேலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக, அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டார் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம். தேர்தல் நடத்த முடியாத சூழ்நிலையில் தொகுதியுள்ளதால் தேர்தலை ரத்து செய்கிறோம் என அந்த தொகுதிக்கான தேர்தலை ரத்து செய்துவிட்டது ஆணையம். இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் ஏ.சி.சண்முகம், அது தள்ளுபடியானது.
இந்நிலையில் ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் ஆரணி நகரத்தில் 200வது வாக்குசாவடியில் தனது குடும்பத்தினரோடு வாக்களிக்க வந்தார் ஏ.சி.சண்முகம். வாக்களித்தவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, நாடு முழுக்க தேர்தல் நடக்குது, நான் போட்டியிட்ட தொகுதியில் தேர்தலை நிறுத்திட்டாங்க எனச்சொல்லியபடி கண்ணீர்விட்டார். கண்ணீரை துடைத்துக்கொண்டு மீண்டும் பேசியவர், மே 19ந்தேதி தமிழகத்தில் 4 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதோடு சேர்த்து வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் மனு தர டெல்லி செல்கிறேன் என்றார்.