பா.ஜ.கவில் கேரள மாநிலப் பொறுப்பாளராகவும் தேசியச் செயலாளராகவும் இருந்த தமிழக பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா, சமீப காலமாக வழக்கமாகப் பேசும் சர்ச்சைக்குரிய கருத்துகள் எதையும் பேசுவதில்லை. இதற்கு காரணம் என்ன? என விசாரித்தபோது, அவர் மத்திய அமைச்சராக முயற்சி செய்துகொண்டிருக்கிறார். அதனால்தான் மௌனமாக இருக்கிறார் என்கிறார்கள் பா.ஜ.கவினர்.
உத்திரப்பிரதேசத்தில் ராஜ்யசபா உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறுகிறது. அதில், எட்டு உறுப்பினர்கள் பாஜகவைச் சேர்ந்தவர்கள், தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளது. அதில் ஒருவராகப் போட்டியிட்டு அதற்குப் பிறகு மத்திய அமைச்சர் பதவியை அடையலாம் என எச்.ராஜா காய் நகர்த்தி வருகிறார்.
சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தேசிய நிர்வாகிகள் பட்டியலில் எச்.ராஜா பெயர் இடம்பெறவில்லை. அதனால் தன்னை மத்திய அமைச்சராக்குங்கள் என பா.ஜ.க மேலிடத்திடம் கோரிக்கை வைத்திருக்கிறார் எச்.ராஜா. ஆனால், அவரை அமைச்சராக்கக் கூடாது எனத் தமிழக பா.ஜ.கவில் இருந்து எதிர்ப்பு குரல்கள் டெல்லிக்குச் சென்றிருக்கிறது என்கிறது பா.ஜ.க வட்டாரங்கள்.