குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி பதிலளித்தார். காங்கிரஸ் கட்சி எந்தவொரு பிரச்சனைக்கும் தீர்வு காண விரும்புவதில்லை. அவர்களை போல் இல்லாமல், நாங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணவே விரும்புகிறோம். எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு பா.ஜ.க. மேலும் மேலும் வளரவே உதவும் என்று கூறினார்.
அப்போது அதானியும் மோடியும் நண்பர்கள் எனக் கூறி எதிர்க்கட்சிகள் அவையின் மையப்பகுதியில் கூடி முழக்கமிட்டன. அதானி விவகாரம் குறித்து விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழுவை அமைக்க வலியுறுத்தியும் எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டன.
இதன் பின் மத்திய பட்ஜெட் மீதான விவாதத்தில் திமுக எம்.பி. ஆ.ராசா மக்களவையில் பேசினார். அப்போது பேசிய அவர், "140 கோடி மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளதாக பிரதமர் மோடி எதன் அடிப்படையில் சொல்கிறார்? பழங்குடியினருக்காக ஒரு பள்ளிக்கூடம் கூட திறக்கப்படவில்லை. எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. இட ஒதுக்கீட்டைக் குறைத்துவிட்டு, எதன் அடிப்படையில் அவர்களின் பாதுகாவலர்களாக இருப்பதாகக் கூறுகிறீர்கள்? நாட்டிலுள்ள இளைஞர்களுக்கு எந்த விதமான வேலைவாய்ப்புகளும் வழங்கப்படவில்லை. கொரோனா பாதிப்பு சூழலை ஒன்றிய அரசு முறையாகக் கையாளவில்லை;
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் கூட முறையாக அடக்கம் செய்யப்படவில்லை. திராவிட மாடல் ஆட்சி உள்ள தமிழ்நாட்டில் வறுமை கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. குஜராத் மாடல் ஆட்சியில் அம்மாநிலத்தில் வறுமை ஒழிக்கப்பட்டுள்ளதா? திராவிட மாடலை பின்பற்றும் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக உள்ளது” எனக் கூறினார்.