இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள இராணிப்பேட்டை தொகுதி என்பது மிக முக்கியமானது. தொழிற்சாலைகள் நிரம்பிய தொகுதி இது. இந்தத் தொகுதியில் திமுகவின் சிட்டிங் எம்.எல்.ஏவும், மா.செவுமான காந்தி நிற்கிறார். அதிமுகவில் ஒப்பந்ததாரர் சுகுமார், நாம் தமிழர் கட்சியில் சைலஜா, மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் ஆதம்பாஷா, அமமுக சார்பில் வீரமணி, சுயேட்சைகள் எனக் களத்தில் உள்ளனர். திமுக, அதிமுக வேட்பாளர்கள் பெரிய பணக்காரர்களாக இருந்தாலும் இருவரும் தொகுதியில் பெரிய பலமில்லாத சாதியைச் சேர்ந்தவர்கள்.
திமுக வேட்பாளர் காந்தி, வன்னியச் சமுதாயத்தினருக்கு சமமாக உள்ள சிறுபான்மையின வாக்குகள், பட்டியலின வாக்குகள், பிறசாதி வாக்குகள் தனக்குப் பலமாக அமையும் என நம்புகிறார். அதேபோல் சிட்டிங் எம்.எல்.ஏவாக தொகுதியில் உள்ள ஒவ்வொரு ஊருக்கும் 6 மாதத்துக்கு ஒருமுறை விசிட் அடித்து உதவி எனக் கேட்பவர்களுக்குத் தாராளமாகச் செலவு செய்தது அவருக்குப் பெரிய பலமாக உள்ளது. இராணிப்பேட்டை, தொழிற்சாலைகள் நிரம்பிய மாவட்டம். தொழிலதிபர்களின் நண்பரான காந்தியை அதிகம் நம்புகின்றனர்.
அதிமுக வேட்பாளர் தொகுதியில் உள்ள 75 ஆயிரத்து சொச்சம் வன்னியர் வாக்குகளை பாமக தனக்கு வாங்கித்தரும் என நம்புகிறார். காங்கிரஸ், தாமக, அமமுக எனப் பயணமாகி பின்னர் அதிமுகவுக்கு வந்தவர். கட்சியில் நீண்ட காலமாக உள்ள கட்சியினரை மதிக்காதது, பணம் தந்து சீட் வாங்கி வந்தவருக்கு, பணத்தாலே எல்லாவற்றையும் சாதித்துவிட முடியும் என நம்புகிறார். அப்படிப்பட்டவருக்கு நாங்கள் பணியாற்ற வேண்டுமா என அதிமுகவில் சீட் எதிர்பார்த்து ஏமாந்த வன்னிய பிரமுகர்கள் பெரும் எதிர்ப்பு காட்டுகின்றனர். இவரை வேட்பாளராக அறிவித்தபோது முன்னாள் மா.செ ஏழுமலை தலைமையில் 3 ஆயிரம் கட்சியினர் தொடர்ச்சியாக 3 நாள் போராட்டம் நடத்தினார்கள். அவர்களை மாநிலங்களவை எம்.பி முகமதுஜான் தான் சமாதானம் செய்து சுகுமாருக்காக களப்பணியாற்ற வைத்தார்.
தேர்தல் பிரச்சாரம் செய்துவிட்டு வந்த முகமதுஜான், நெஞ்சுவலியால் இறந்துபோனது சுகுமாருக்கு பெரிய இழப்பு. அதேநேரத்தில் சாவு வீட்டுக்கு வந்த பிரமுகர்களிடமும் வாக்குகேட்டது அவருக்கு இஸ்லாமிய மக்களிடம் அதிருப்தியை உருவாக்கிவைத்துள்ளது. ஆனாலும் முகமதுஜான் இறப்பு இஸ்லாமிய மக்களிடம் அனுதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த அனுதாபம் தனக்கு ஓட்டாகக் கிடைக்கும் என நம்புகிறார்.
கணிசமான அளவில் விஷாரம் நகராட்சியில் உள்ளது இஸ்லாமிய மக்களின் வாக்குகள். மக்கள் நீதி மய்யம் ஆதம்பாஷா, இஸ்லாமிய வாக்குகள் தனக்கே என நம்புகிறார். கடைசி நேரத்தில் ஓட்டுக்கு 2 ஆயிரம் எனத் தந்து வாங்கிவிடலாம் என ஒரு வேட்பாளரும், ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கிவிடலாம் என மற்றொரு வேட்பாளரும் முடிவு செய்துள்ளார்களாம்.