Skip to main content

நீதியரசர் நடராஜன் மறைவு நீதித்துறைக்கு பேரிழப்பு! -டாக்டர் ராமதாஸ் அனுதாபம்

Published on 11/09/2020 | Edited on 11/09/2020


  

ddd

 

 

சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதியும், வழக்கறிஞர்கள் சமூகநீதி பேரவையின் ஆலோசகருமான நீதியரசர் கே.எம். நடராஜன் இன்று காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

 

நடராஜனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், “நீதியரசர் கே.எம். நடராஜன் அவர்கள் தான் தமிழகத்தின் பெரும்பான்மை சமுதாயமான வன்னியர் சமுதாயத்தின் சார்பில் நியமிக்கப்பட்ட முதல் உயர்நீதிமன்ற நீதிபதி ஆவார்.  சென்னை உயர்நீதிமன்றம் தொடங்கப்பட்டு  நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தான் வன்னியர் சமூகத்தை சேர்ந்த அவருக்கு அவ்வாய்ப்பை எம்.ஜி.ஆர் அரசு வழங்கியது. நீதிபதியாக பணியாற்றிய காலத்தில்  முக்கியமான வழக்குகளில் குறிப்பிடத்தக்க பல தீர்ப்புகளை வழங்கியவர் நடராஜன் ஆவார்.

 

சமூகநீதியில் மிகுந்த அக்கறை கொண்ட நீதியரசர் நடராஜன், என் மீது மிகுந்த அன்பும், அக்கறையும் கொண்டவர். சமூகநீதி தொடர்பான விஷயங்களில் என்னுடன் அவர் பல தருணங்களில் நீண்ட விவாதங்களை நடத்தியவர். சமூக நலன் சார்ந்த விஷயங்களில் என்னுடன் இணைந்து பயணித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய பல்வேறு நிகழ்ச்சிகளில் நீதியரசர் நடராஜன் கலந்து கொண்டுள்ளார். 

 

நீதியரசர் கே.எம்.நடராஜன் அவர்களின் மறைவு நீதித்துறைக்கு ஏற்பட்ட பெரும் இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள், சட்டம் மற்றும் நீதித்துறையினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கிறேன் ’’ என்று தெரிவித்துள்ளார் டாக்டர் ராமதாஸ்.

 


 

சார்ந்த செய்திகள்