Skip to main content

“கூட்டணிக்கு வராவிடில் அதிமுக பெரிய விலை கொடுக்க நேரிடும்” - பா.ஜ.க

Published on 27/01/2024 | Edited on 27/01/2024
BJP says AIADMK will have to pay a heavy price if it does not come to a coalition

பாஜகவும் - அதிமுக கூட்டணியில் இருந்த நிலையில், தமிழக பாஜகவினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுகவும் பாஜகவும் இணைந்து என்.டி.ஏ கூட்டணியில் களம் கண்டது. இந்த நிலையில் கூட்டணி முறிவு ஏற்பட்டு, வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிடுகிறது. இதனைத் தொடர்ந்து அதிமுக தேர்தல் குழுவை அமைத்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 

இந்த நிலையில், பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் இன்று (27-01-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “எடப்பாடி பழனிசாமி தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும், 13 சதவீத இஸ்லாமிய வாக்குகளில் 1 சதவீத வாக்குகளை கூட பெறுவதே கஷ்டம் தான். 2019, 2021ஆம் ஆண்டுகளில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்த அதிமுக, இப்போது பசுத்தோல் போர்த்திய புலிப்போல் இருந்தால் அதை நம்ப மக்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை.  

எடப்பாடி பழனிசாமி இந்துக்களின் வாக்குகளையும், சிறுபான்மையினர் வாக்குகளையும் இழக்கப்போகிறார். எங்களுடன் கூட்டணிக்கு வராவிடில் அதிமுக பெரிய விலை கொடுக்க நேரிடும். பா.ஜ.க.வுடன் கூட்டணிக்கு வராவிடில் வரும் காலங்களில் அரசியல் ரீதியாக அதிமுகவினர் மிகவும் வருத்தப்படுவார்கள். பா.ஜ.க.வை அவர்கள் சாதாரணமாக கருதுகிறார்கள். ஆனால் அப்படியில்லை என்பதை அவர்கள் தேர்தலுக்குப் பிறகு தெரிந்து கொள்வார்கள்” என்று கூறினார்.

முன்னதாக அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “பாஜக என்கிற கட்சி வட மாநிலத்தில் மட்டுமே இருந்தது; தென் மாநிலங்களில் அந்த கட்சியே கிடையாது. தென் மாநிலங்களில் அழைத்து வந்து கூட்டணி அமைத்தவர் ஜெயலலிதா. தேசியம் என்ற சொல்லுக்கு ஒரு அமைப்பை உருவாக்கி கொடுத்தவர் ஜெயலலிதா. பின்னர் தமிழ்நாட்டின் உரிமைக்காக கேட்ட கோரிக்கையை நிறைவேற்றாத காரணத்தால் அந்த கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டார். அதிமுக கட்டிய கட்டடம் தான் என்.டி.ஏ கூட்டணி என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்