Skip to main content

கோல் ஊன்றி நடந்தாவது தமிழ் மக்களுக்கு நான் போராடுவேன்... ராமதாஸ் பேச்சு

Published on 23/09/2019 | Edited on 23/09/2019

 

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அண்ணா கலையரங்கத்தில், தமிழ் படைப்பாளிகள் பேரியக்கம் சார்பில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசின் முத்து விழாவானது இயல், இசை, நாடக முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது. விழாவில், நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமி வாழ்த்திசை பாடினார். மாணவி பிரதிக்‌ஷா வடிவேல் நடனம் ஆடினார். 

 

pmk


விழாவில் ராமதாஸ் பேசியதாவது, ஒட்டுமொத்த சமுதாயத்தின் கனவும், நமது கனவும் ஒன்று தான். அந்த கனவு நனவாக வேண்டும் என்று தான் நாம் எல்லோரும் பாடுபட்டுக்கொண்டு இருக்கிறோம். நாம் எல்லாரும் காண்கின்ற அந்த கனவு என்ன என்று உங்களுக்கு (மக்களுக்கு) தெரியும். அதை நான் சொல்லி புரிய வைக்க வேண்டியது இல்லை.

 

pmk


ஆனாலும், 8 கோடி மக்களை கொண்ட தமிழ் சமுதாயம் இன்னும் என் பின்னால் வர மறுக்கிறது. என்னிடம் என்ன குறை இருக்கிறது? என் கொள்கைகளில் என்ன குறை இருக்கிறது? நான் நடந்து வந்த பாதையில் என்ன தெளிவு இல்லாமல் இருக்கிறது? என்பதை மேடை போட்டு சொல்லுங்கள் நான் பதில் சொல்கிறேன் என்றேன். குறை இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், திருத்திக்கொள்கிறேன் என்று சொன்னாலும் கூட யாரும் குறை சொல்ல முன்வரவில்லை. 


 

நான் ஒரு போராளி. தமிழ் மக்களுக்காக, தமிழ் சமுதாயத்துக்காக போராடுகின்றவன். என் மொழிக்காக உயிரை கொடுக்க தயாராக இருக்கின்றவன். நம் மண்ணுக்காக எதையும் தியாகம் செய்ய தயாராக இருக்கின்றவன்.


 

அந்த வகையில் 80 ஆண்டுகள் முடிந்து 81-வது வயதில் லட்சக்கணக்கான இளைஞர்கள், சிறுவர்களை பார்க்கும் போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் இந்த தமிழ் மக்களுக்கு தொடர்ந்து போராடுவேன். எனது முதுமை காலத்திலும் கூட கோல் ஊன்றி நடந்தாவது இந்த தமிழ் மக்களுக்கு நான் போராடுவேன். தமிழ் சமுதாயத்துக்கு தொடர்ந்து என்னை அர்ப்பணித்துக்கொள்வேன் என்றார். 
 

சார்ந்த செய்திகள்