Skip to main content

திமுக கைவிரிப்பு ! ராஜஸ்தானிலிருந்து எம்.பி.யாகிறார் மன்மோகன் சிங்! 

Published on 03/07/2019 | Edited on 03/07/2019

 


காங்கிரசுன் மூத்த தலைவர்களில்  ஒருவரும் முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங்கை ராஜ்யசபா எம்.பி.யாக்க திட்டமிட்டு,  நாடாளுமன்ற தேர்தலின் போதே, " திமுக தரப்பிலிருந்து ஒரு ராஜ்யசபா சீட்டை மன்மோகன்சிங்கிற்காக ஒதுக்க வேண்டும் " என திமுக தலைமையிடம் ராகுல்காந்தி கோரிக்கை வைத்திருந்தார். 

 

manmohan singh



மத்தியில் மோடி ஆட்சி வீழ்த்தப்பட்டு காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமையும் என்கிற நம்பிக்கையில், 'ஆகட்டும் பார்க்கலாம்' என திமுக தலைமை தெரிவித்திருந்திருக்கிறது. ஆனால், காங்கிரஸ் ஆட்சி அமையாததுடன், பெரும் தோல்வியையும் சந்தித்தது காங்கிரஸ்.  இதனால், காங்கிரஸ் மீதான கூட்டணி தர்மத்தை தள்ளி வைத்தே இருக்கிறது திமுக. 


 

இந்த நிலையில், தமிழகத்திற்கான ராஜ்யசபா தேர்தல் ஜூலை 18-ல் நடக்கிறது. இதனைத்தொடர்ந்து, மன்மோகனுக்காக ராஜ்யசபா சீட்டை காங்கிரஸ் தலைமை எதிர்பார்த்த நிலையில், ' சீட் இல்லை ' என கைவிரித்து விட்டது அறிவாலயம். இதனால் மிகவும் நொந்து போயிருக்கிறது காங்கிரஸ் தலைமை. 
இதனையடுத்து,  ராஜஸ்தான் சட்டமன்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மூலம், மன்மோகன் சிங்கை ராஜ்யசபாவுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்திருக்கிறார் சோனியா காந்தி. 
 

இது தொடர்பாக, ராஜஸ்தான் முதல்வர் அசோக்கெலட்டிடமும், அம்மாநில காங்கிரஸ் தலைவர்களிடமும் ராகுல்காந்தி விவாதித்துள்ளார்.


இதையடுத்து,  ராஜஸ்தானிலிருந்து அவரை போட்டியிட வைப்பதற்கான நடவடிக்கைகளில் காங்கிரஸ் முயற்சித்து வருகிறது. ராஜஸ்தானில் பெரும்பான்மை பலத்துடன் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இருப்பதால்  போட்டியின்றி மன்மோகன் சிங் தேர்வு செய்யப்படுவார்  என காங்கிரஸ் தரப்பில் எதிரொலிக்கிறது.



 

சார்ந்த செய்திகள்