சென்னை பெருநகர குடிநீர் வழங்கல், கழிவுநீரகற்று வாரியம் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய திட்டபணிகள் குறித்த ஆய்வு கூட்டம் சென்னை சிந்தாரிதிப்பேட்டையில் உள்ள குடிநீர் வழங்கல் வாரியத்தின் அலுவலகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் வேலுமணி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை மற்றும் அரசு முதன்மை செயலாளர் ஹர்மந்தர் சிங், குடிநீர் வழங்கல் வாரிய திட்ட இயக்குனர் ஹரிஹரன்,சென்னை குடிநீர் வாரிய செயல் இயக்குனர் பிரபு சங்கர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வேலுமணி,
" 2017-18ம் ஆண்டு மானிய கோரிக்கையின்போது உள்ளாட்சி பகுதிகளில் கட்டிடம் கட்ட அனுமதி வழங்குவது எளிமைப் படுத்தப்படும் என்று கூறப்பட்டு இருந்தது. அதன்படி பொறியாளர்கள் மூலம் தயாரிக்கப்படும் வரைபடம் தானியங்கி மென்பொருள் மூலம் சரிபார்த்துக்கொள்ளும் வெளிப்படையான முறை அனைத்து நகராட்சிகளில் ஏற்படுத்தப்படும்.
கட்டிட அனுமதி மற்றும் திட்ட அனுமதிக்கு உள்ளாட்சித்துறை எடுத்துக்கொள்ளும் கால அளவினை குறைக்கும் வகையில் குடியிருப்பு கட்டிடங்கள் கட்ட 2500 சதுர அடி மேற்படாத பரபளவிற்கு 1200 சதுர அடி பரப்பளவில் கட்டப்படும் குடியிருப்பு கட்டிடங்களுக்கு மட்டும் கள ஆய்வு இன்றி கட்டிட அனுமதி மற்றும் திட்ட அனுமதி எளிய முறையில் வழங்கப்படும்.
அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை முறைப்படுத்தப்படும் திட்டம் நகரட்சிகள் மற்றும் மாநகரட்சிகளில் படிப்படியாக விரிவாக்கம் செய்யப்படும். அதேநேரத்தில் மனை பிரிவுக்கு ஏற்கனவே விண்ணப்பம் செய்துள்ள 1,82,954 பேர் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறலாம்.
கொண்டுவரப்படும் திட்டத்தின் மூலம் மக்கள் பொறியாளர்களை தவிர மற்ற அரசு அலுவலர்களை சந்திப்பது தவிர்க்கப்படும். இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும் போது பொறியாளர் உறுதிமொழி ஆவணத்தை இணைத்து பதிவேற்றம் செய்யவேண்டும். கட்டிடம் கட்டிய பின்பு கட்டிடத்தின் உறுதி மற்றும் பாதுகாப்புக்கு பொறியாளரே முழு பொறுப்பு மற்றும் கட்டிடம் கட்டிய பின்பு உள்ளாட்சி நகரமைப்பு ஆய்வாளர் ஆய்வு செய்ய வேண்டும்.
இணையத்தில் ஆவணம் வாங்கிய பின்பு விதிகள் மீறிய செயல், போலியான ஆவணம் கொண்டு திட்டங்கள் வாங்கி இருக்கும் பட்சத்தில் திட்ட அனுமதி ரத்து செய்யப்படும் அதேநேரத்தில் பொறியாளர் அனுமதி ரத்து செய்யப்பட்டு குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.