Published on 31/08/2019 | Edited on 31/08/2019
முல்லை பெரியாறு அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்ட நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு ஷட்டரை இயக்கி தண்ணீரை திறந்து வைத்தார். அப்போது ஓபிஎஸ் பங்கேற்ற விழாவை ட்ரோன் எனப்படும் ஹெலிகேம் மூலம் நிகழ்ச்சியை ஒளிப்பதிவு செய்தனர். முல்லை பெரியாறு பகுதியில் குறிப்பிட்ட பகுதிக்குள் மேல் ஒளிப்பதிவு செய்யவோ, புகைப்படம் எடுக்கவோ கேரள அரசின் வனத்துறை மற்றும் காவல் துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும். இதனால், துணை முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சியில் ஹெலிகேம் மூலம் நிகழ்ச்சி ஒளிப்பதிவு செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
பின்பு இது குறித்து கேட்ட போது தமிழக அதிகாரிகள் நிகழ்ச்சிக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்தனர். அதே போல் ஹெலிகேம் நாங்கள் ஏற்பாடு செய்யவில்லை என்று கூறினர். அதன் பின்பு அப்புறம் எப்படி வானில் ஹெலிகேம் மூலம் ஒளிப்பதிவு செய்யப்பட்டது என்று சந்தேகம் எழுந்த நிலையில் கேரள வனத்துறையினருக்கு இது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இந்த விழாவில் தேனி நாடாளுமன்ற உறுப்பினரும் ஓபிஎஸ் மகனுமான ரவீந்திரநாத்குமார், ஜக்கையன் எம்.எல்.ஏ., கலெக்டர் பல்லவி பல்தேவ் உள்பட கட்சி நிர்வாகிகள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.