தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. அ.தி.மு.க., தி.மு.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அ.ம.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ், பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் தங்கள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மற்றும் கூட்டணியின் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக, மதுரவாயல் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் தற்போதைய அமைச்சரும், வேட்பாளருமான பென்ஜமினை ஆதரித்து பா.ம.க.வின் இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது; "தி.மு.க.வில் நடைபெறுவது மன்னராட்சி, மேல் மட்டத்தில் மட்டுமல்லாமல், கீழ் மட்டம் வரை மன்னராட்சிதான். பிரசாந்த் கிஷோர் என்ன சொல்கிறாரோ, அதை மட்டும்தான் ஸ்டாலின் செய்வார். உதயநிதி ஸ்டாலினுக்கு அரசியலில் என்ன அனுபவம் இருக்கிறது? கரோனா பெருந்தொற்று காலம் என்பதால், அ.தி.மு.க. அறிவித்துள்ள திட்டங்கள் மிக பயனுள்ள திட்டங்கள். தமிழ்நாட்டில் மக்களாட்சி வர வேண்டும், மன்னராட்சி வரக் கூடாது" என்றார்.