ரஜினி ஏப்ரலில் கட்சி தொடங்கி, ஆகஸ்ட்டில் மாநாடு நடத்தி, செப்டம்பரில் சுற்றுப் பயணம் என்று அறிவித்தது மட்டுமில்லாமல் பா.ம.க.வுடன் கூட்டணி பற்றியும் அவர் முடிவெடுப்பார் என்று உற்சாகமாகப் பேட்டி கொடுத்த தமிழருவி மணியன், அதே வேகத்தில் ரஜினியாகக் கட்சி தொடங்கும்வரை, அது குறித்து நான் வாயைத் திறக்கப் போவதில்லை என்று விரக்தியை வெளியிட்டிருக்கிறார்.
பா.ம.க.வுக்கும், ரஜினிக்கும் இடையில் மலர்ந்த நட்புறவை முதலில் அம்பலப்படுத்தியது நம்ம நக்கீரன்தான். இதையே மணியனும் அழுத்தமாக உணர்த்தியிருந்தார். நட்புக்கான வடிவம் இன்னும் முழுமை பெறுவதற்குள், இது பற்றி மணியன் போட்டு உடைத்து விட்டதில், ராமதாசுக்கும் ரஜினிக்குமே வருத்தம் உள்ளதாக சொல்கின்றனர். அதன் எதிரொலிதான் தமிழருவி மணியனின் முடிவு என்கின்றனர். இந்த நிலையில் தாங்கள் அ.தி.மு.க. கூட்டணியில் இருப்பதாக மட்டுமே வெளிப்படுத்த வேண்டும் என்று கட்சியினருக்கு அறிவுறுத்தியிருக்கிறார் ராமதாஸ். இந்த நிலையில், அரசியல் விமர்சகர்கள் இருவர் ஆடிட்டர் குருமூர்த்தி அனுப்பியதாகக் கூறி, அன்புமணியை சந்திக்க முயன்றிருக்கிறார்கள். அன்புமணி இது பற்றி குருமூர்த்தியிடமே விசாரிக்க, நான் யாரையும் அனுப்பவில்லை என்று அவர் சொல்லிவிட்டார். அதனால், அந்த இருவரையும் அனுப்பியது யார் என்று விறுவிறுப்பாக விசாரித்துக்கொண்டு இருக்கிறார் என்கின்றனர்.