
மேட்டுப்பாளையத்தில் தனது சட்டையைக் கழற்றி தனக்குத்தானே தீ வைத்துக்கொண்ட பாஜக பிரமுகரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
குமாரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். இவர் 4 மாதங்களுக்கு முன் பாஜகவில் இணைந்துள்ளார். இந்நிலையில், நேற்றிரவு மேட்டுப்பாளையம் நகர காவல்நிலையத்தில் பாஜக நகரத் தலைவர் உமா சங்கர் மற்றும் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் சதீஷ் மீது விஸ்வநாதன் புகார் அளித்துள்ளார். விஸ்வநாதன் அளித்த புகாரில், ‘நகர நிர்வாகி உமா சங்கரும் மாநில செயற்குழு உறுப்பினர் சதீஷ் என இருவரும் தன் மீது பெட்ரோல் பாட்டிலை வீசினார்கள். இதனால் என் சட்டை முழுவதும் எரிந்தது. என் மீது தாக்குதல் முயற்சி நடத்தியுள்ளனர்’ என்ற புகாரை காவல்நிலையத்தில் கொடுத்திருந்தார்.
புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மேட்டுப்பாளையம் டிஎஸ்பி பாலாஜி தலைமையில் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் விஸ்வநாதன் தன் சட்டையில் தானே நெருப்பு வைத்துக்கொண்டு காவல்நிலையத்தில் பொய்ப் புகார் அளித்துள்ளார் என்பது தெரியவந்தது. தொடர்ந்து விஸ்வநாதனை கைது செய்த காவல்துறையினர் அவர் மீது வன்முறையை தூண்டுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் கைதாகியுள்ள பாஜக பிரமுகரை மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.