அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்து வந்தது தேமுதிக. 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில் பாமகவுக்கு நிகரான தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தது. ஆனால், அதிமுக தலைமை இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இந்நிலையில், இன்று தேமுதிகவின் தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. பிறகு, தேமுதிக தலைவர் விஜயகாந்த், "அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுகிறது" என அறிக்கை மூலம் அறிவித்தார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்போது தேமுதிகவின் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும் என விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தொண்டர்கள் மத்தியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் ஆவேசமாக உரையாற்றினார். அதில்,
"இது காலதாமதமான முடிவுதான். ஆனால், ஒரு விஷயத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை. அதனால், அம்மா மிகவும் சோர்வாக இருக்கிறார். தொண்டர்களாகிய உங்களைப் பார்த்தால் உற்சாகம் அடையும் அம்மா, வீட்டுக்கு வந்ததும் சிங்கம் மாதிரி இருந்த அப்பாவை உடல் நலிவுற்ற நிலையில் பார்க்கமுடியாமல் அவதிப்படுகிறார். கேப்டன் நலமாகத்தான் இருக்கிறார். ஆனால், அவர் பழைய நிலைக்குத் திரும்பி வரவேண்டும் என்றுதான் அனைவரும் நினைக்கிறோம். மீண்டும் வருவார் அப்பா, கவலைவேண்டாம். கட்சி பொருளாதார நெருக்கடியில் உள்ளது. அதுகுறித்து, நாம் அனைவரும் கூடிப் பேசி தீர்வு காண்போம். எதிர்கால எழுச்சி என என்னை நம்புகிறீர்கள் அல்லாவா? நான் பார்த்துக் கொள்கிறேன். கட்சியின் எதிர்காலத்தை நான் வலுப்படுத்துகிறேன். எங்க அப்பாவ சிம்மாசனத்துல உக்கார வைக்கிறேன். அதற்கு நீங்கள் அனைவரும் 100-க்கு 200 சதவீதம் என்னுடன் நிற்க வேண்டும்.
நம்மை விமர்சிப்பவர்கள் வாரிசு அரசியல் எனக் கூறுவார்கள். கேப்டனுக்கு சிங்கக் குட்டிகள் போல நாங்கள் இரண்டு பேர் இருக்கிறோம். நாங்கள் ஏன் பேசக்கூடாது. தேர்தல் முடியட்டும் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் நான் வருகிறேன். இரவு பகலாக உழைப்பதற்கு நான் தயார். எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தேசிய முற்போக்குத் திராவிடக் கழகத்தின் கொடி தமிழகம் முழுக்க பறக்கும். அதான் எங்கள் சொத்து. டெல்லியில் இருப்பவர்கள் எல்லாம் தமிழ்நாட்டு பக்கம் வந்துகொண்டிருக்கிறார்கள். நாம், டெல்லிக்குச் செல்வோம். உலக அளவில் தேமுதிகவை எப்படி கொண்டுவருகிறேன் எனப் பாருங்கள். கொஞ்சம் பொறுத்திருந்து பாருங்கள் விஜய பிரபாகாரனின் ஆக்ஷனை" இவ்வாறு பேசினார்.