Skip to main content

மா.செ.க்கள் மாற்றம்? ரஜினி அதிரடி முடிவு! மீண்டும் சத்திய நாராயணா!

Published on 04/03/2020 | Edited on 04/03/2020

குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடியுரிமை பதிவேடு மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகிய சட்ட திட்டங்கள் குறித்து நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் கருத்துத் தெரிவித்திருந்தார். ஏற்கனவே இந்தியா முழுவதும், இஸ்லாமியர்களும், மாணவர்களும் இந்த சட்டங்களுக்கு எதிராக போராடிவரும் நிலையில், ரஜினியின் கருத்துகள் விவாதத்தைக் கிளப்பின.

இதையடுத்து, இஸ்லாமிய மதகுருமார்கள் சிலர் ரஜினியை போயஸ் கார்டன் வீட்டில் வைத்து சந்தித்துப் பேசினர். மேலும், அரசியல் வல்லுனர்கள், மூத்த வழக்கறிஞர்கள் சிலரிடம் பேசிய ரஜினி, இந்த சட்டங்கள் குறித்த தனது நிலைப்பாட்டை மாற்றி இருக்கிறார் என்கிறது மக்கள் மன்றத் தரப்பு.

Rajini Action Result! Satya Narayana again!


இந்நிலையில், மார்ச் 05-ந்தேதி சென்னையில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில், ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை ரஜினிகாந்த் கூட்டுகிறார்.

ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேச முடிவை பொதுவெளியில் அறிவிப்பதற்கு முன்பு வரையும், ரஜினி மக்கள் மன்றத்தின் செயல்பாடுகள் மிகத் தீவிரமாக இருந்தன. ஆனால், அரசியல் அறிவிப்புக்குப் பிறகு தொடர்ச்சியாக நிலைப்பாட்டில் எடுக்கும் முடிவுகள், மாற்றங்கள், பாஜக ஆதரவுக் கருத்துகளைத் தெரிவிப்பது, சினிமா கால்ஷீட் ஒதுக்குவது போன்ற காரணங்களால், மன்றத்தினர் மந்தமான போக்கைக் கடைபிடிக்கத் தொடங்கினர். இதனால், உறுப்பினர் சேர்க்கை திட்டமிட்டதில் பாதியைக் கூட எட்டவில்லை.

எனவே, மிகக் குறுகிய கால அளவே நடக்கவிருக்கும் இந்தக் கூட்டத்தில், கட்சி தொடங்கலாமா வேண்டாமா என்பது குறித்து ரஜினிகாந்த் விவாதிக்க இருப்பதாகவும், மா.செ.க்களை மாற்றி அறிவிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

மக்கள் மன்றத் தரப்பிலோ, “தொடர்ந்து கருத்துகளை மாற்றி மாற்றிப் பேசுவது, பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுப்பது, போராட்டமே கூடாதென்பது போன்ற தலைவரின் சமீபத்திய செயல்பாடுகள் மக்கள் மத்தியில் எடுபடவில்லை. மக்கள் போராடுகிறார்கள். தலைவரோ போராடுகிறவர்களை சமூகவிரோதிகள் என்கிறார். அப்படி இருக்கையில், மக்களை எங்களால் எப்படி நெருங்கமுடியும். இதனை தலைமைக்கும் தெரியப்படுத்த இருக்கிறோம்” என்கிறார்கள்.

 

Rajini Action Result! Satya Narayana again!


இந்தக் கூட்டத்தின் மையப்புள்ளியே, ரஜினியின் ரசிகர் மன்றக் காலத்தில் இருந்து, ரஜினியோடு பயணிக்கும், முக்கிய முடிவுகளை எடுக்கும் சத்திய நாராயணாவின் ரீஎண்ட்ரிதான். ரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்பில் இருந்து, ரஜினி மக்கள் மன்றப் பொறுப்புகள் சுதாகர் என்பவரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தன.

ரஜினியும் வேறு சில காரணங்களுக்காக சத்தியநாராயணாவை விலக்கி வைத்திருந்த நிலையில், ராகவேந்திரா மண்டபத்திற்கு வருவதைத் தவிர்த்து வந்தார். இந்நிலையில், மக்கள் மன்றப் பணிகளில் ஆல் இன் ஆலான சத்தியநாராயணா, சில வாரங்களாக ராகவேந்திரா மண்டபத்தில் தென்படுகிறார். சுதாகர் கட்டுப்பாட்டுக்குள் மக்கள் மன்றம் இருந்தபோது, ஆளாளுக்கு ஆவர்த்தனம் செய்யும் கூத்துகள் அரங்கேறின. இதனாலேயே, பழைய கசப்புகளை மறந்து மீண்டும் ரஜினி சத்திய நாராயாணாவை களமிறக்கி இருப்பதாக சொல்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்