Skip to main content

மின் கட்டண கணக்கீட்டு முறை செல்லும் என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி மனு!

Published on 23/07/2020 | Edited on 23/07/2020

 

Madras High Court

 

மின் கட்டண கணக்கீட்டு முறை செல்லும் என்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி,  சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


ஊரடங்கு காலத்தில் மின் கட்டண அளவீடு செய்யப்படாததால், முந்தைய மாதம் செலுத்திய கட்டணத்தின் அடிப்படையில், நான்கு மாதங்களுக்கு மின் கட்டணம் கணக்கிடப்பட்டு, அதை இரண்டு இரு மாதங்களுக்கு எனப் பிரித்து வசூலிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவித்திருந்தது.

 

இதை எதிர்த்து தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் வழக்கறிஞர் எம்.எல்.ரவி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

 

முந்தைய மாதம் செலுத்திய கட்டணத்தின் அடிப்படையில் மின் கட்டணத்தை நிர்ணயிப்பதற்குப் பதில்,  மின் பயன்பாட்டு யூனிட் அடிப்படையில் மின் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.

 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அமர்வு, தமிழக அரசின் மின் கணக்கீட்டு நடைமுறையில் எந்தச் சட்ட விரோதமும் இல்லை எனக் கூறி, கடந்த வாரம், மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது.

 

இந்நிலையில்,  இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி ரவி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அதில், இந்திய மின்சார சட்ட விதி 45(3) -இல் குறிப்பிட்டபடி,  மின் உபயோக அளவீட்டுபடியே கணக்கீடு செய்து கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும்.  இப்போது வசூலிக்கப்பட்ட கட்டணம், உபயோகப்படுத்திய மின் யூனிட்டை விட, அதிக யூனிட்டுக்கு வசூலிக்கப்பட்டுள்ளது.

 

100யூனிட் தள்ளுபடி என்பது, ஏற்கனவே உள்ள விதிகளின் படியே கொடுக்கப்பட்டுள்ளது.  அதனால் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.   

 

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

 

 

 

சார்ந்த செய்திகள்