அதிமுகவின் முப்பெரும் விழாவினைக் கொண்டாடவும், தனது பலத்தை நிரூபிக்கவும் திருச்சியில் மாநாட்டினை ஏற்பாடு செய்திருந்தார் ஓபிஎஸ். திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் நடந்த இந்த மாநாட்டில் பல்லாயிரக்கணக்கில் அவரது ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டில் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன், வெல்லமண்டி நடராஜன், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். மாநாட்டில் பல்வேறு விஷயங்கள் குறித்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது தரப்பைச் சேர்ந்தவர்கள் பேசினார்கள்.
அதில் எடப்பாடி பழனிசாமி எம்ஜிஆர் போல் தொப்பி, கண்ணாடி அணிந்து போட்டோவிற்கு போஸ் கொடுத்ததை பற்றி ஓபிஎஸ் பேசுகையில், ''தனக்குத்தானே அதிமுகவின் பொதுச் செயலாளராக தானே முடி சூட்டிக்கொண்டு. ஐயோ ஒரு கேலிக்கூத்து... எம்.ஜி.ஆர் என்றால் அவருக்கு ஒரு அடையாளம் இருக்கிறது. ஒரு அழகான தொப்பி, கருப்பு கண்ணாடி. அந்த தொப்பிக்கும் அந்த கருப்பு கண்ணாடிக்கும் அழகு சேர்த்தவரே எம்ஜிஆர். அதைப் போட்டுக் கொண்டு கேமராவில் நின்று போஸும் கொடுக்கிறாயே. எவ்வளவு பெரிய அநியாயம். எவ்வளவு பெரிய அக்கிரமம். நீயும் எம்ஜிஆர் ஒண்ணா. அவருடைய கால் தூசிக்கு நீ ஆக மாட்டாய். அவர் ஒரு கருணைக்கடல், அன்பு தெய்வம், கொடை வள்ளல். இந்த இயக்கத்தை தனக்கு பின்னால் யார் வழி நடத்திச் செல்ல வேண்டும் என்று தீர்க்கதரிசனமாக ஜெயலலிதாவை தந்த தலைவர். உனக்கும் அவருக்கும் என்ன இருக்கிறது" என்று பேசினார்.
மதுரையில் நடைபெற்ற அதிமுகவின் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமில் நேற்று கலந்து கொண்ட ராஜன் செல்லப்பா எம்எல்ஏ நிருபர்களிடம் பேசுகையில், "திருச்சியில் நடைபெற்றது மாநாடு அல்ல. அது வெறும் பொதுக்கூட்டம் தான். நாங்கள் நடத்துகிற மாதிரி அது ஒரு சாதாரண பொதுக்கூட்டம். சாதாரண தலைமை கழக பேச்சாளர்கள் பேசும் கூட்டம் மாதிரி இருந்தது. ஓபிஎஸ் தரப்பினர் பெரியளவில் முயற்சி எடுத்தும் மிக பெரிய அளவில் பெரிய கூட்டத்தை கூட்ட முடியவில்லை. அந்த கூட்டத்தில் ஓபிஎஸ் மிகவும் அநாகரிகமாக பேசி உள்ளார். அவர் விரக்தியின் உச்சியில் இருக்கிறார் என்று தெரிகிறது. இந்த கூட்டம் மூலம் புதிய கட்சி, சின்னத்தை ஆரம்பிப்பதில் அவர் அடித்தளம் அமைத்துள்ளதில் எங்களுக்கு மகிழ்ச்சி. அவர் அதிமுகவை பற்றி பேசுவதை தவிர்த்து விட வேண்டும். அரசியல் நாகரீகம் கருதி நாகரீகமாக பேசுவதை விட்டு விட்டு எடப்பாடி பழனிசாமியை ஒருமையில் பேசும் அளவுக்கு தரம் தாழ்ந்து போய்விட்டார். இனிமேல் அவர் கட்சி குறித்து வழக்கு தொடருவதில் எந்த பயனும் இல்லை.
அதிமுக என்றால் எடப்பாடி பழனிசாமியை தான் தொண்டர்கள் நினைப்பார்கள். அதிமுகவின் அலுவலகம், கொடி மற்றும் சின்னம் ஆகியவை எங்களிடம் உள்ளது. தேர்தல் ஆணையமும் இதனை உறுதிப்படுத்தி விட்டது. ஓபிஎஸ் தொடர்ந்து அதிமுக கொடியை பயன்படுத்தினால் அவருக்குத்தான் அவமானம். அதிமுக என்ற பெயரை பயன்படுத்தினால் அவரே வெட்கப்பட வேண்டிய சூழ்நிலை தான் ஏற்படும். எடப்பாடி பழனிசாமி கூறியது போல் ஓபிஎஸ் முடிந்த கதை. இடிந்து விட்ட கட்டிடம்.இடிந்த செங்கலுக்குள் சிக்கி விட்ட இவர் மீண்டும் கட்டுவதற்கு முயற்சி செய்யலாம். எம்ஜிஆர் வேடத்தை எடப்பாடி பழனிசாமிக்கும் போட்டு பார்ப்போம், ஓபிஎஸ்க்கும் போட்டு பார்ப்போம். இதில் யாருக்கு எம்ஜிஆர் போன்ற தோற்றம் ஒட்டி வருகிறது, பொருந்தி வருகிறது என பார்ப்போம்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை ஒன்று அதிமுக, மற்றொன்று திமுக. இந்த இரண்டு கட்சியில்தான் உள்கட்டமைப்பு உள்ளது. இந்த கட்சிகளின் தலைமையில்தான் கூட்டணி அமையும். இதனை மறைக்க முடியாது.யாரை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம்" என பேசினார்.