அதிமுகவுக்கு ஒரே தலைமை வேண்டும். இரட்டைத்தலைமை அ.தி.மு.க-வில் கூடாது என்று மதுரை வடக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளருமான ராஜன் செல்லப்பா கூறினார். ராஜன் செல்லப்பா கூறிய கருத்தையே குன்னம் அதிமுக எம்எல்ஏ ராஜேந்திரனும் கூறியுள்ளார்.
இதையடுத்து தொண்டர்கள் இனி அ.தி.மு.க. நிர்வாக முறைகளைப் பற்றியோ, தேர்தல் முடிவுகளைப் பற்றிய தங்கள் பார்வைகளைப் பற்றியோ, கட்சியின் முடிவுகளைப் பற்றியோ, பொது வெளியில் கருத்துக்களை யாரும் கூறக்கூடாது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிக்கை வெளியிட்டனர். மேலும் வரும் 12ஆம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள், எம்பிக்களின் ஆலோசனைக்கூட்டம் நடக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்,
அ.தி.மு.க.வுக்கு ஒற்றைத்தலைமை தேவையா என்பதை காலம்தான் முடிவு செய்யும். அ.தி.மு.க.வில் பிளவு என்பதே இல்லை. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் வேண்டுகோளின்படி அ.தி.மு.க.வினர் பொதுவெளியில் எவ்வித கருத்துகளும் தெரிவிக்காமல் இருக்க வேண்டும்.
கட்சியில் சிறு சிறு பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். உட்கட்சி விவகாரம் குறித்து நிர்வாகிகள் கூட்டத்தில் விவாதிக்கலாம், பொதுவெளியில் கூடாது. ஒற்றைத்தலைமை தொடர்பாக அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் முடிவு செய்ய முடியாது. எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சியை கலைக்க நினைக்கிறார்கள். அண்ணா கூறியபடி துண்டு என்பது பதவி; வேட்டி என்பது மானம் போன்றது; எங்களுக்கு வேட்டிதான் முக்கியம். எங்களுக்கு மானம், தன்மானம்தான் முக்கியம். பதவிக்காக பல் இளிக்க மாட்டோம்.
கட்சி ஆரோக்கியமாக இருக்கும். கட்சியை பொறுத்தவரையில் எந்தவித பிரதிபலனும் பார்க்காமல் உழைக்கிற தொண்டர்களுக்கு தான் இந்த கட்சியில் எதிர்காலம். ஒற்றை தலைமையை காலம்தான் முடிவு செய்யும். இவ்வாறு கூறினார்.