
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பேரூராட்சி அதிமுக செயலாளராக தினேஷ்குமார் என்பவர் பதவி வகித்து வருகிறார். இவரின் வீட்டின் அருகில் சிலர் தினசரி இரவு நேரங்களில் மது அருந்தி வந்துள்ளனர். இதனை தினேஷ்குமார் தட்டிக் கேட்டுள்ளார். இருப்பினும் அதனை மதிக்காமல் மீண்டும் மது அருந்தியுள்ளனர். இது தொடர்பாக தினேஷ்குமார் நேற்று முன்தினம் (25.02.2025) காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த இருவர் நேற்று முன்தினம் இரவு தினேஷ்குமாரைக் கத்தியால் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
இதனையடுத்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தினேஷ்குமார் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இது தொடர்பாக வினோத் மற்றும் விக்னேஷ் என்கிற அப்பு என்ற இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக தினேஷ்குமார் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து அதிமுக தரப்பில் திருக்கழுக்குன்றம் பேருந்து நிலைய பகுதியில் இன்று (27.02.2025) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிமுக மாவட்ட செயலாளர் ஆறுமுகத்தை போலீசார் வீட்டுக் காவலில் வைத்தனர்.
இதனை அறிந்து அவரது வீட்டின் முன்பு அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் குவிந்தனர். அவர்களை போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இந்நிலையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அங்கு வந்தார். இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் தனியார் மண்டபத்தில் அடைக்க அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இதனைக் கண்டித்து அதிமுக தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்குச் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டடதற்கு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “திருக்கழுக்குன்றம் பேரூராட்சிக் கழகச் செயலாளர் தினேஷ்குமார் தாக்கப்பட்டதைக் கண்டித்து எனது அறிவுறுத்தலின்படி, இன்று செங்கல்பட்டு கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருந்த நிலையில், போராட்டத்திற்குத் தலைமை தாங்கவிருந்த கழக அமைப்புச் செயலாளர் ஜெயக்குமாரையும், செங்கல்பட்டு கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் ஆறுமுகத்தையும், அதிமுக மகளிர் அணி இணைச் செயலாளரும், மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினருமான மரகதம் குமரவேலையும், பல்வேறு கழக நிர்வாகிகளையும் மற்றும் தொண்டர்களையும் திமுக அரசின் ஏவல் துறையால் கைது செய்திருப்பதற்கு எனது கடும் கண்டனம்.

திமுக அரசு, தன் ஆட்சியின் அவலங்கள் மக்களுக்குத் தெரியவே கூடாது என்று பிரதான எதிர்க்கட்சியின் குரலுக்குப் பயந்து அதனை ஒடுக்குவதில் மட்டும் தான் தெளிவாக இருக்கிறதே தவிர, ஆக்கப்பூர்வமாக அரசாட்சி செய்து மக்களைக் காக்கும் எண்ணம் துளியும் இல்லை. அதிமுகவைக் கண்டாலே இந்த திமுக அரசுக்கு அச்சம் ஏற்பட்டு நடுங்குவது என்பது நாடறிந்த உண்மை என்றாலும், ஆர்ப்பாட்டத்திற்கு முன் அதிமுக அமைப்புச் செயலாளரையும், மாவட்டக் கழகச் செயலாளரையும், சட்டமன்ற உறுப்பினரையும் கைது செய்வது கோழைத்தனத்தின் உச்சம். பேரூராட்சி கழக செயலாளர் தினேஷ் குமார் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்கள் அனைவரும் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், கைது செய்யப்பட்டுள்ள ஜெயக்குமார், திருக்கழுக்குன்றம் எஸ். ஆறுமுகம், மரகதம் குமரவேல், அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.