
மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், “தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழகத்திற்கு நிதி வழங்கப்படும். தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத பட்சத்தில் 2,000 கோடி ரூபாயைத் தரச் சட்டத்தில் இடம் இல்லை. அரசியல் காரணங்களுக்காகவே தேசிய கல்விக் கொள்கையைத் தமிழக அரசு எதிர்க்கிறது. உள்ளூர் மொழிக்கு முதலிடம் என்ற தேசிய கல்விக் கொள்கையைத் தமிழக அரசு ஏற்கிறதா இல்லையா?. ஏற்றால் தான் நிதி” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார். இவரது பேச்சுக்குத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதோடு மும்மொழிக் கொள்கையைத் திணிக்க முயல்வதாகக் கூறி மத்திய பாஜக அரசுக்கு எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்தி, சமஸ்கிருதம் படையெடுப்பால் வட இந்திய மாநிலங்களில் 25க்கும் மேற்பட்ட மொழிகள் அழிந்துள்ளன என திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுகவின் அதிகாரப்பூர்வ செய்திதாளான முரசொலியில், அக்கட்சியின் தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “ஒரு சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சமஸ்கிருதமும் மேலும் சில மொழிகளும் கலந்து திரிபடைந்ததால் இந்தி உருவானது. சமஸ்கிருதம், இந்தி மூலம் ஆரியப் பண்பாட்டை திணிக்க முயன்றால் இந்த மண்ணில் இடம் கிடையாது.
தமிழ்நாடு மும்மொழி கொள்கையை ஏற்றால் சமஸ்கிருத மயமாக்கும் திட்டம் தான் எதிர்காலத்தில் நிறைவேற்றப்படும். தமிழ் மொழியை இந்தி மொழியாலோ சமஸ்கிருத மொழியாலோ அழிக்க முடியாது. இந்தி, சமஸ்கிருதம் படை யெடுப்பால் வட இந்திய மாநிலங்களில் 25க்கும் மேற்பட்ட மொழிகள் அழிந்துள்ளன. முகமூடி தான் இந்தி ஆனால் அதற்குள் ஒளிந்திருக்கும் முகம் சமஸ்கிருதம். எந்த மொழியை வேண்டுமானாலும் படிக்கலாம் என்று ஒரு தினசாக பேசுகின்றனர். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான மொழி தமிழ். தன்னிலிருந்து திராவிட குடும்பத்து மொழிகளை கிளைத்திடச் செய்த தாய்மொழி தமிழ்” எனத் தெரிவித்துள்ளார்.