அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், “ராமர் பெயரை பயன்படுத்தி நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சியை பிடித்ததுபோல், அனுமன் பெயரை பயன்படுத்தி கர்நாடகாவில் ஆட்சியை பிடித்துவிடலாம் என்று நாடகம் ஆடினார்கள். அனுமன் கர்நாடகாவில் பிறந்தார் எனச் சொல்லி அங்கு அரசியல் நடத்தினார்கள். வாட்ஸ் அப், ஊடகங்களில் எல்லாம் பார்த்திருப்பீர்கள்... ஒரு கவரின் ஐந்து இரண்டு ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வைத்து அதன் மேல் தாமரை சின்னத்தை வைத்து வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தனர். ரூ. 2000 நோட்டு 2018 ஆம் ஆண்டுக்கு பிறகு அவ்வளவாக புழகத்தில் இல்லை. இது தொடர்பாக என் மீது வழக்கு போட்டாலும் கூட அவர்கள் கொடுத்த பணத்திற்கான ஆதாரங்கள் இருக்கிறது அதனை நிரூபிக்க நானும் காங்கிரஸ் கட்சியினரும் தயாராக இருக்கிறோம். இத்தனை நாடகங்களுக்கு பிறகும் மிகப் பெரிய வெற்றியை கர்நாடகா மக்கள் காங்கிரஸுக்கு அளித்துள்ளனர்.
கர்நாடகாவில் முதல் விக்கெட் விழுந்திருக்கிறது. 2024 ஆம் ஆண்டு நடைபெறும் பைனல் மேட்சில் மேன் ஆஃப் தி மேட்சாக எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் இருப்பார் என நான் ஏற்கனவே பேசியுள்ளேன். தேர்தலின் முடிவு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த 2000 ரூபாய் நோட்டு விவகாரம் கூட கர்நாடகா தேர்தல் முடிவு காரணமாக இருக்கக்கூடுமோ என சில அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அது நம்பத்தக்கதாகவும் இருக்கிறது. அண்ணாமலை கர்நாடகாவில் தோல்வியை சந்தித்துவிட்டு, தமிழ்நாட்டிற்கு வந்ததும் அவரை அடையாளம் காட்டிக்கொள்ள ஒரு பேட்டி கொடுத்தார். அந்தப் பேட்டியில், ‘பாஜக மற்றும் அதன் அதிகாரம் குறித்து இன்னும் 10 நாட்களில் செந்தில் பாலாஜி தெரிந்து கொள்வார்’ எனப் பேசினார்.
இது மட்டுமல்ல 2022 ஆகஸ்ட் மாதத்தில், ‘அமலாக்கத்துறை தற்போது பிசியாக உள்ளது. அந்த பிஸியை எல்லாம் முடித்துவிட்டு செந்தில் பாலாஜிக்கு ரெயிடு வருவார்கள்’ என பகிரங்கமாக சொன்னார். செந்தில் பாலாஜியை குறி வைக்க காரணம், கோவை மற்றும் கரூர் ஆகிய பகுதிகளில் சட்டமன்றத் தேர்தலின்போது அதிமுக கூட்டணி கனிசமான இடங்களைப் பெற்றது. ஆனால், தேர்தல் முடிந்து இந்தப் பகுதிகளுக்கு செந்தில் பாலாஜி பொறுப்பேற்ற பிறகு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் 100க்கு 100 திமுக வெற்றி பெற்றது. ஆகவே அவரை முடக்க வேண்டும் என்பதற்காக இப்படிப்பட்ட காரியங்களில் அண்ணாமலை திட்டமிட்டு செய்திருக்கிறார் என்பதற்கு அவரின் முந்தைய பேச்சுக்களே உதாரணமாக காட்ட முடியும். முதலமைச்சர் இங்கு இல்லாதபோது இப்படியான காரியங்களை செய்வது பாஜகவின் கேவலமான அரசியலை காட்டுகிறது.
எங்கள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 23 ஆம் தேதி சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு சென்று உலக முதலீட்டாளர்களின் முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு இழுக்கச் சென்றிருக்கிறார். அதன்படி அவர் தினமும் முதலிட்டாளர்களைச் சந்தித்து இங்கு கொண்டுவரும் முதலீடுகளை குறித்த செய்திகள் தேசிய பத்திரிகைகளில் எல்லாம் வந்துகொண்டிருக்கிறது. எனவே இதனை திசை திருப்ப என்ன முயற்சி எனும் வஞ்சக எண்ணத்தோடு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊரில் இல்லாத நேரத்தில் பாஜக அரசு இன்று ரெயிடு நடத்தியிருக்கிறார்கள். திமுக எந்த காலத்திலும், ரெயிடுகளுக்கு பயந்ததில்லை. 1976 அவசர காலகட்டத்திலேயே ரெயிடு என்றால் என்னவென்றே தெரியாதபோதே ரெயிடுகளை எதிர்கொண்டு முறியடித்து வெற்றி பெற்ற இயக்கம் திமுக.
ஒரு ரெயிடு நடக்கிறது என்றால், மாநில காவல்துறையிடம் தெரிவித்து, உள்ளூர் காவல்துறையினரின் உதவியுடன் ரெயிடுக்கு செல்வதுதான் வழக்கம். ஆனால் இன்று எந்த தகவலும் வரவில்லை என மாவட்ட எஸ்.பி.யே சொல்கிறார். இதில் சந்தேகம் எழுகிறது. எந்தவித அடையாளமும் இல்லாமல் விடியற்காலை மூன்று மணிக்கு வந்திருக்கிறார்கள். அதனால், அங்கிருந்தவர்கள் அவர்கள் யாரெனத் தெரியாமல் தற்காப்புக்காக வாக்குவாதம் ஏற்பட்டு தாக்கியிருக்கலாம். ஆனால், எனக்கு விவரம் வந்தவுடனேயே செந்தில் பாலாஜியை தொடர்பு கொண்டு திமுகவினர் யாரும் அங்கிருக்கக் கூடாது என்று சொன்னேன். அவரும் உடனடியாக அங்கிருந்து அவர்களை கலைந்துபோக செய்திருக்கிறார்.
இதில் இருந்து என்ன தெரிகிறது. ஐ.டி. அதிகாரிகளை அடித்தார்கள் என செய்தியாக்கி திட்டமிட்டு சட்ட ஒழுங்கு பிரச்சனையை உருவாக்க முயற்சிக்கிறார்கள் என பொதுமக்கள் கூட சொல்லும் அளவுக்கு இந்த சோதனை நடந்துள்ளது. கடந்த ஆட்சியில் விஜய பாஸ்கர் வீட்டில் சோதனை நடந்தபோது எவ்வளவு கலவரங்கள் நடந்தன. ஆனால், அன்றைக்கு ஆட்சியில் இருந்தவர்கள் நடவடிக்கை எடுத்தார்களா” என்று தெரிவித்தார்.