கோரிக்கைகளுக்காக போராடிய மருத்துவர்களை பழிவாங்கும் நோக்குடன் பணியிடமாற்றம் செய்திருப்பதை ஏற்க முடியாது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். மேலும் அரசு மருத்துவர்கள் இடமாற்றத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொண்டதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்களை தமிழக அரசு இடமாற்றம் செய்திருக்கிறது. அவர்கள் தவிர ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்களை இடமாற்றம் செய்வதற்கான 17-பி குறிப்பாணைகளையும் தமிழக அரசின் சுகாதாரத்துறை அனுப்பியிருப்பது கடும் அதிர்ச்சியளிக்கிறது.
அரசு மருத்துவர்களுக்கு காலம் சார்ந்த ஊதிய உயர்வு வழங்க வேண்டும்; பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கு பணியிட கலந்தாய்வை நடைமுறைப்படுத்த வேண்டும்; பட்ட மேற்படிப்பு மற்றும் உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளில் தமிழக அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50% இட ஒதுக்கீட்டை மீண்டும் வழங்க வேண்டும்; அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவர்கள் பணியிடங்களின் எண்ணிக்கையை குறைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 24&ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தி வந்த தமிழக அரசு மருத்துவர்கள், அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க நவம்பர் ஒன்றாம் தேதி போராட்டத்தைக் கைவிட்டனர்.
அரசு மருத்துவர்களின் வேலைநிறுத்தத்தால் நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது உண்மை தான் என்றாலும் கூட, அவர்களின் கோரிக்கைகளில் நியாயம் இருப்பதை எவரும் மறுக்க முடியாது. இன்னும் கேட்டால், மருத்துவ மேற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் கிராமப்புறங்களில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50% இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக அரசே போராட்டம் நடத்தியிருக்க வேண்டும். மாறாக, அரசின் சார்பில் அவர்கள் போராட்டம் நடத்தினர்கள். மருத்துவர்களின் மற்ற கோரிக்கைகளில் உள்ள நியாயத்தையும் அரசே ஏற்றுக் கொண்டிருப்பதுடன், நிதி நெருக்கடி காரணமாகத் தான் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியவில்லை என்றும், விரைவில் அவை நிறைவேற்றப்படும் என்றும் கூறியிருக்கிறது. இவ்வாறாக நியாயமான கோரிக்கைகளுக்காக போராடிய மருத்துவர்களை பழிவாங்கும் நோக்குடன் பணியிடமாற்றம் செய்திருப்பதை ஏற்க முடியாது.
எந்தவிதமான தர்க்கமும் இல்லாமல், இடமாற்றம் செய்ய வேண்டும் என்பதற்காக அரசு மருத்துவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதால் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், மாவட்ட மருத்துவமனைகளிலும் இதய நோய், சிறுநீரக நோய், முடநீக்கியல், குழந்தைகள் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சிறப்புப் பிரிவுகள் தொடங்கப்பட்டு, அப்பிரிவுகளில் சிறப்பு மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர். இப்போது, வேலைநிறுத்தத்தைக் காரணம் காட்டி அவர்களில் பலர் சாதாரண அரசு மருத்துவமனைகளுக்கு இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மாற்றப்பட்டுள்ள மருத்துவமனைகளில் சிறப்புப் பிரிவுகள் எதுவும் இல்லாததால், அவர்களின் சிறப்பு மருத்துவ சேவை யாருக்கும் பயன்படவில்லை. அதேநேரத்தில், சிறப்பு மருத்துவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு விட்டதால் உயர்சிறப்பு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகள் ஆகியவற்றில் செயல்பட்டு வந்த சிறப்பு மருத்துவப் பிரிவுகள் மூடப்பட்டுள்ளன. இதனால் அங்கு வழக்கமாக சிறப்பு மருத்துவம் பெற்று வந்த உள் நோயாளிகளும், புறநோயாளிகளும் சிறப்பு மருத்துவம் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தம் மேற்கொண்டிருந்த போது, அப்போராட்டம் திரும்பப் பெறப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உள்ளிட்ட ஆட்சியாளர்களும், சென்னை உயர்நீதிமன்றமும் கேட்டுக் கொண்டனர். அதற்கு காரணம், நோயாளிகள் பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்ற நல்லெண்ணம் தான். ஆனால், மருத்துவர்கள் வேலைநிறுத்தம் திரும்பப் பெறப்பட்ட பிறகும் நோயாளிகள் தொடர்ந்து பாதிக்கப்படுகிறார்கள் என்றால், மருத்துவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் வீணாகி விட்டதாகத் தான் பொருளாகும். இதற்கு அரசே காரணமாக இருக்கக்கூடாது.
எனவே, அரசு மருத்துவர்களின் பணியிடமாற்றங்களை முழுமையாக ரத்து செய்து, அவர்கள் இதுவரை எங்கு பணியாற்றி வந்தார்களோ, அதே மருத்துவமனைகளில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 17-பி குறிப்பாணைகளையும் தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும். இடமாற்றம் செய்யப்பட்ட மருத்துவர்களின் பணியிடங்களில் புதிதாக நியமிக்கப்பட்ட இளம் மருத்துவர்களை காலியாக உள்ள இடங்களில் பணியமர்த்த வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.