Skip to main content

“தரம் தாழ்ந்த அரசியல் செய்யும் ஆளுநர்கள்” - முதல்வர் மு.க.ஸ்டாலின்

Published on 18/01/2024 | Edited on 18/01/2024
Governors who do inferior politics Chief Minister M.K.Stalin

திமுக இளைஞரணி 2-வது மாநில மாநாடு வருகிற ஜனவரி 21ஆம் தேதி சேலத்தில், இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு மற்றும் சிறப்பு செயலாக்க திட்டத்துறை அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இதனையொட்டி, இருசக்கர வாகன பேரணி, மாநாட்டுப் பாடல் வெளியீடு எனப் பல்வேறு நிகழ்ச்சிகளை இளைஞர் அணி மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், மாநாட்டு சுடர் ஓட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை அண்ணா சாலை சிம்சன் சந்திப்பில் உள்ள பெரியார் சிலையில் இருந்து இன்று (18-01-24) காலை தொடங்கி வைத்தார். மேலும், அங்குள்ள அண்ணா, பெரியார் மற்றும் கலைஞர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிலையில் திமுக தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், “சேலம் மாநகரில் ஜனவரி 21 ஆம் நாள் மிகுந்த எழுச்சியுடன் நடைபெறவிருக்கிறது. கழக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு. திமுக தலைவர் என்ற பொறுப்பைச் சுமந்திருக்கும் உங்களில் ஒருவனான என்னை உங்கள் அனைவரிடமும் அடையாளப்படுத்தியது இளைஞரணிதானே. கடந்த 1980 ஆம் ஆண்டில் மதுரை ஜான்சிராணி பூங்காவில் கலைஞர் இளைஞரணியைத் தொடங்கி வைத்து, அதனை என் கைகளில் ஒப்படைத்தார். 1982 ஆம் ஆண்டு முதல் இளைஞரணிச் செயலாளராகப் பணியாற்றத் தொடங்கி, 30 ஆண்டுகளுக்கு மேல் அதனை வழிநடத்தி, கலைஞரின் நம்பிக்கையைப் பெற்றேன். 2007 ஆம் ஆண்டு நெல்லை மாநகரில் இளைஞரணியின் முதல் மாநில மாநாடு, வெள்ளி விழா மாநாடாகச் சிறப்பாக நடைபெற்று, அடுத்த தலைமுறையினரைக் திமுகவின் பக்கம் ஈர்த்தது. கழகத் தலைமையின் சுமையைப் பங்கிட்டுக் கொள்ளும் அணியாக இளைஞரணி எப்போதும் முன்னிற்பது வழக்கம்.

இப்போதும் அந்த வழிமுறைப்படி, 2024 நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் சூழலில், ஜனநாயகப் போர்க்களத்திற்குக் கழக வீரர்களை ஆயத்தப்படுத்தும் பயிற்சிப் பாசறையாக அமையவிருக்கிறது, சேலத்தில் நடைபெறும் இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு. இது கூடிக் கலையும் நிகழ்வல்ல; கொள்கையைக் கூர் தீட்டும் உலைக்களம். மாநில உரிமை முழக்கத்தை முன்னெடுக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாடு. பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு, கழகத்தையும் தமிழ்நாட்டையும் தலைமையேற்று வழிநடத்திய கலைஞர் 1970-ஆம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற கழக மாநில மாநாட்டில் ஐம்பெரும் முழக்கங்களை நமக்கு வழங்கினார். அதில் ஐந்தாவது முழக்கம், ‘மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி’ என்பதாகும். பன்முகக்தன்மை கொண்ட இந்திய ஒன்றியம் வலிமையாக இருக்க வேண்டுமென்றால், மாநிலங்களுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதே மாநில சுயாட்சிக் கொள்கையின் நோக்கம். அது நிறைவேற்றப்பட்டால்தான், உண்மையான கூட்டாட்சிக் கருத்தியலின்படி இந்திய ஒன்றியம் வலிமையுடன் செயல்பட முடியும்.

Governors who do inferior politics Chief Minister M.K.Stalin

பத்தாண்டுகால மத்திய பா.ஜ.க. ஆட்சியில் மாநிலங்களின் உரிமைகள் பலவும் பறிபோய்விட்டன. கல்வி உரிமை, மொழி உரிமை, நிதி உரிமை, சட்ட உரிமை என மாநிலங்களின் உரிமைகளை மத்திய அரசு அபகரிக்கும் போக்கு தொடர்வதையும், ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரான அராஜகப் போக்கு மிகுவதையும் காண்கிறோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குப் போட்டியாக, நியமனப் பதவியில் உள்ள ஆளுநர்களை வைத்து அரசாங்கத்தை நடத்த நினைக்கும் எதேச்சாதிகாரப் போக்கு என்பது மாநிலங்களுக்கு எதிரானது மட்டுமல்ல, இந்திய அரசியல் சட்டத்திற்கே எதிரானதாகும். ஆளுநர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட உயர்ந்த பொறுப்புக்குச் சிறிதும் தகுதியில்லாதவர்களாக, மலிவான, தரம் தாழ்ந்த அரசியல் செய்யும் அவலத்தை இந்தியா இப்போதுதான் காண்கிறது.

ஆன்மீக உணர்வுகளை அரசியலாக்கி மதவெறியைத் தூண்டுவது, இந்தி - சமஸ்கிருதத்தைத் திணித்துத் தமிழ் உள்ளிட்ட அவரவர் தாய்மொழிகளையும் அதன் பண்பாட்டையும் சிதைப்பது, திருவள்ளுவரில் தொடங்கி தெருவில் நடந்து போவோர் வரை எல்லார் மீதும் காவிச் சாயம் பூசுவது என்பதை மத்திய ஆட்சியாளர்களே முன்னின்று செய்கின்ற மூர்க்கத்தனமான அரசியலை ஜனநாயக வழியில் முறியடிக்கும் வலிமை திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உண்டு. அதை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அவசர, அவசிய தேவை இருக்கிறது என்பதை உணர்த்தக்கூடிய அளவில் சேலத்தில் கழக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறவிருக்கிறது.

சென்னையையும் பிற மாவட்டங்களையும் கடுமையாகப் பாதித்த மிக்ஜாம் புயல் - மழை காரணமாகவும், தென்மாவட்டங்களில் கடும் தாக்கத்தை ஏற்படுத்திய வரலாறு காணாத மழை - வெள்ளத்தினாலும் இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட இளைஞரணி மாநில மாநாடு, ஜனவரி 21 இல் சேலத்தில் எழுச்சியுடன் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இளைஞரணிச் செயலாளரும், இளைஞர் நலன் - விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி முன்னெடுத்து வருகிறார். இளைஞரணி நிர்வாகிகள் அனைவரும் அவருக்குத் தோளோடு தோள் நின்று பணியாற்றுவதைக் காண்கிறேன். அதுபோலவே, சேலம் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக உள்ள கழக முதன்மைச் செயலாளர் மாநாடுகளைச் சிறப்பாக நடத்திக்காட்டுவதில் வல்லவரான மாண்புமிகு கே.என்.நேருவும், சேலம் மாவட்டக் கழக நிர்வாகிகளும் பந்தல் அமைப்பு தொடங்கி அனைத்து ஏற்பாடுகளையும் இரவு - பகலாக மேற்கொண்டு வருகிறார்கள்.

இளைஞரணி மாநில மாநாட்டின் நோக்கத்தை வலியுறுத்தும் வகையில், தமிழ்நாடு தழுவிய அளவில் இருசக்கர வாகனப் பேரணியை கண்கவரும் வகையில் நடத்திக் காட்டிய இளைஞரணி நிர்வாகிகள், இன்று (ஜனவரி 18) காலையில் சென்னை சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலையிலிருந்து சுடரேந்தித் தொடர் ஓட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இளைஞரணிச் செயலாளர் தம்பி உதயநிதி தொடங்கி வைத்த இந்தச் சுடரோட்டம் சேலம் வரை தொடர்கிறது. இந்த நேரத்தில், நான் நினைத்துப் பார்க்கிறேன். காஞ்சிபுரத்தில் 1972 ஆம் ஆண்டு நடந்த மாநில சுயாட்சி மாநாட்டின்போது, கோபாலபுரம் இளைஞர் தி.மு.க சார்பில் பேரறிஞர் அண்ணா நினைவிடத்திலிருந்து அண்ணா ஒளிச்சுடரை ஏந்தி - ஓடி, மாநாட்டு மேடையில் கலைஞர், நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன் ஆகியோரிடம் நான் வழங்கியது என் நினைவுக்கு வருகிறது. சேலத்தில் நடைபெறும் மாநில மாநாட்டிற்காக இளைஞரணியினர் ஏந்தியுள்ள ஒளிச்சுடர், காலம்தோறும் கொள்கை வெளிச்சம் பாய்ச்சிடும் அணியாக இளைஞரணி திகழும் என்பதை மெய்ப்பிக்கிறது. மாநாட்டில் தலைமையுரை ஆற்றுகின்ற உங்களில் ஒருவனான நானும் மனதளவில் என்றும் என்னை இளைஞனாகவே கருதுகிறேன்.

Governors who do inferior politics Chief Minister M.K.Stalin

நான் வளர்த்து ஆளாக்கிய அணியின் இரண்டாவது மாநில மாநாட்டில் பங்கேற்பதில் ஒரு தாயின் உணர்வுடன் பெருமிதம் கொள்கிறேன். தொடர்ச்சியான பணிகள் காரணமாக, மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து ஒன்றிரண்டு கடிதங்களே என்னால் எழுத முடிந்தது. எனினும், இளைஞரணியின் 25 ஆம் ஆண்டினையொட்டி 2007-ஆம் ஆண்டு நெல்லையில் நடைபெற்ற இளைஞரணியின் முதலாவது மாநில மாநாட்டின்போது, நம் உயிர்நிகர் கலைஞர்  உடன்பிறப்புகளுக்கு எழுதிய 25 கடிதங்களை முரசொலியின் ஒவ்வொரு நாளும் முதல் பக்கத்தில் மீண்டும் வெளியிட்டு, இன்றைய தலைமுறையினருக்கு வரலாற்றுப் பாடத்தைக் கற்றுத் தந்திருக்கிறது கழகம். மாநாட்டு நாள் நெருங்கி வரும் நிலையில், உங்களில் ஒருவனான நான் இந்த மடலை எழுதுகிறேன். நாடாளுமன்றத் தேர்தலும் நெருங்கி வருகிறது. ஜனநாயகத்தின் அடர்ந்த இருண்ட காலத்திலிருந்து இந்தியாவை மீட்டெடுத்து, மீண்டும் ஒரு விடுதலை வெளிச்சம் நிறைந்த காலத்தினை மக்கள் காண்பதற்கு இந்தியா கூட்டணியின் முன்னெடுப்புகள் தொடங்கியுள்ளன. இந்தப் பொருத்தமான சூழலில்தான், மாநில உரிமை மீட்பு முழக்கத்தினை மையமாகக் கொண்டு இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறுகிறது. அமைச்சர் உதயநிதி அழைக்கிறார். கழக உடன்பிறப்புகளே சேலத்தில் நடைபெறும் இளைஞரணி மாநாட்டில் திரண்டிடுவீர். நான் முன்பே சொன்னதுபோல கடல் இல்லாச் சேலம் மாவட்டம், கருப்பு - சிவப்புக் கடல் ஆகட்டும். இந்தியாவின் ஒளிமிகுந்த புது வரலாற்றை இளைஞரணி படைக்கட்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.

Next Story

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு முதல்வர் பாராட்டு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Chief Minister praises Minister Udayanidhi Stalin

கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கனடாவில் நடைபெற்றது. இதில் சாம்பியனுக்கான இறுதி போட்டியின் கடைசி சுற்றில் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ் (வயது 17) அமெரிக்காவின் நகமுராவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் இருவரும் 1/2 புள்ளிகள் பெற்றனர். இதன் மூலம் 14 சுற்றுகள் கொண்ட இந்தப் போட்டியின் முடிவில் 9 புள்ளிகள் பெற்று குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். நகமுரா 8.5 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்தார்.

இந்தத் தொடரை வென்றதன் மூலம் உலக செஸ் சாம்பியன் ஷிப் செஸ் போட்டியில் சீனாவில் டிங் லிரெனை எதிர்கொள்ள குகேஷ் தகுதி பெற்றுள்ளார். மேலும் இந்தத் தொடரை வென்று இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வெல்லும் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மூத்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பின் செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வெல்லும் இந்திய வீரர் குகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

Chief Minister praises Minister Udayanidhi Stalin

இதனையடுத்து செஸ் வீரர் குகேஷுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை முகாம் அலுவலகத்தில் இன்று (28.4.2024) பெடே (FIDE) கேண்டிடேட்ஸ் தொடரில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீரர் குகேஷுக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூபாய் 75 இலட்சத்திற்கான காசோலை மற்றும் கேடயத்தையும் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அப்போது தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி மற்றும் குகேஷின் பெற்றோர் ஆகியோர் உடனிருந்தனர். 

Chief Minister praises Minister Udayanidhi Stalin

இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப்பதிவில், “மிக இளம் வயதில் பெடே (FIDE) கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி தொடரில் வெற்றிவாகை சூடி, அனைவரின் புருவத்தையும் உயர்த்தச் செய்து, தாயகம் திரும்பியுள்ள குகேஷுக்கு 75 லட்ச ரூபாய் உயரிய ஊக்கத்தொகையையும் கேடயத்தையும் அளித்து வாழ்த்தி மகிழ்ந்தேன். கல்வியுடன் சேர்த்து அனைத்து விளையாட்டுகளையும் ஊக்குவித்து, தமிழ்நாட்டில் இருந்து மேலும் பல சாதனையாளர்கள் உருவாக உழைத்து வரும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும், அத்துறை அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுகள். இளைஞர்கள் படிப்புடன், ஏதேனும் ஒரு விளையாட்டையும் தங்கள் அன்றாட வழக்கங்களில் இணைத்துக் கொள்ளுங்கள். உங்கள் உடலையும் மனதையும் விழிப்புடனும் சுறுசுறுப்பாகவும் வைத்துக் கொள்ள அது உதவும்” எனத் தெரிவித்துள்ளார்.