70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தலில் 62 இடங்களை கைப்பற்றி மூன்றாவது முறையாக டெல்லி முதல்வர் இருக்கையில் அமர உள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால். இந்த தேர்தலில் பாஜக 8 தொகுதிகளை கைப்பற்றியுள்ள நிலையில், காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. டெல்லியில் ஏற்பட்ட இந்த தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் டெல்லி பொறுப்பாளர் சாக்கோ பதவி விலகினார். அப்போது ஆம் ஆத்மி கட்சிக்கு வாழ்த்து தெரிவித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ட்வீட் செய்து இருந்தார். இதற்கு பிரணாப் முகர்ஜியின் மகளும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சர்மிஷ்டா முகர்ஜி கடுமையாக விமர்சனம் செய்தார்.
இந்த நிலையில் டெல்லி தேர்தல் தோல்வி குறித்து தனியார் தொலைக்காட்சியில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேர்தல் பிரச்சாரத்தின்போது சிஏஏ எதிர்ப்பாளர்களை சுட்டுக்கொல்ல வேண்டும் என பாஜக தலைவர்கள் பேசி இருக்கக் கூடாது என்றும், அதேபோல் அரவிந்த் கெஜ்ரிவாலை பயங்கரவாதி போல் பாஜக தலைவர்கள் பேசியதும் டெல்லி மக்கள் விரும்பவில்லை என்றும் பாஜக தலைவர்களின் தவறான தேர்தல் பிரச்சாரம் தான் பாஜகவின் தோல்விக்கு காரணமாக அமைந்தது என்றும் அவர் குறிப்பிட்டார். இருந்தாலும் டெல்லி மக்கள் பாஜகவை ஒட்டு மொத்தமாக புறக்கணிக்கவில்லை என்றும் பெரும்பாலான இடங்களில் பாஜக வெற்றி வாய்ப்பு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தான் தோல்வி அடைந்துள்ளது என்றும் கூறினார்.
மேலும் ஆம் ஆத்மி டெல்லியில் 7 தொகுதிகளிலும் மூன்றாம் இடத்தை பிடித்து உள்ளதாகவும் அதனால் மக்கள் அவர்களை ஒட்டுமொத்தமாக ஆதரிக்கிறார்கள் என்று கருத முடியாது என்றும் அவர் தெரிவித்தார். இந்த தேர்தல் தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு பாஜக தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது கவனமாக பேச வேண்டும் என்றும் அமித்ஷா கூறியுள்ளார்.