ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது. ஆட்சி அமைக்கத் தனிப்பெரும்பான்மை இல்லாத பா.ஜ.கவுக்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சந்திரபாபு நாயுடுவும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த நிதிஷ்குமாரும் ஆதரவு தருவதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கவுள்ளார்.
அதே சமயம் நாடாளுமன்ற மக்களவைத் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெற காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தயக்கம் காட்டுவதாகக் காங்கிரஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்பது கேபினட் அமைச்சர் பதவிக்குச் சமமானது ஆகும். ஒரு வேளை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராகுல் காந்தி ஏற்காவிட்டால் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் திவாரி உள்ளிட்டோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனையொட்டி ஜூன் 8 ஆம் தேதி காலை 11 மணிக்கு டெல்லியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் கூடுகிறது. இக்கூட்டத்தில் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரைத் தேர்வு செய்தல் மற்றும் மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்து ஆலோசனை நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைமையகமான சென்னை, சத்தியமூர்த்தி பவனில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் மற்றும் தமிழக சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் கூட்டம் இன்று (06.06.2024) நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குத் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கு.செல்வப்பெருந்தகை தலைமை தாங்கினார். தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜேஷ்குமார் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் ராகுல் காந்தியை மக்களவையின் காங்கிரஸ் கட்சித் தலைவராகத் தேர்வு செய்ய வேண்டும் என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஒரு வேளை மக்களவையின் காங்கிரஸ் கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் மக்களவையில் ஆளும் கட்சிக்கு அடுத்தபடியாக உள்ள பெரும்பான்மை கட்சியின் தலைவர் என்ற முறையில் ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.