ஈரோடு மாவட்டத்தில் பிரச்சாரப் பயணத்தை நடத்திவரும் தி.மு.க எம்.பி கனிமொழி, 1 -ஆம் தேதி மதியம் ஈரோடு கச்சேரி வீதியில் உள்ள தந்தை பெரியார், அண்ணா நினைவகத்திற்கு வந்தார்.
பெரியார் சிலை, அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பிறகு, கனிமொழி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறும்போது, “அ.தி.மு.க அரசு பெரியார் கொள்கைக்கு நேர் எதிராகத் தொடர்ந்து செயல்பட்டுவருகிறது. பெரியார் பிறந்த இந்த நினைவகத்தில் உள்ள கலைஞர் புகைப்படத்தைக் கூட அகற்றியுள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கிய பிறகு, அது குறித்த எனது கருத்துகளைத் தெரிவிக்கிறேன். தி.மு.க சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. பணி முடிந்த பிறகு அதில் உள்ள சிறப்பம்சங்கள் உங்களுக்குத் தெரியவரும்.
பா.ம.க.வினர் இன்று நடத்திய நிகழ்வு தேர்தல் அரசியல் நாடகத்திற்காக என்று ஒருவர் கூறிய கருத்து என் ஞாபகத்துக்கு வருகிறது. இது என்னுடைய கருத்து அல்ல. சமூக நீதிக்காகத் தொடர்ந்து தி.மு.க.தான் குரல் கொடுத்துவருகிறது. பாரதிய ஜனதா கட்சி இட ஒதுக்கீட்டை எதிர்த்து வருகிறது. அவர்கள் எங்களைப் பற்றி கருத்துக் கூற அருகதையற்றவர்கள். மு.க.அழகிரி கட்சி தொடங்குவது அவரது தனிப்பட்ட முடிவு. இதில் நான் கருத்துக் கூற ஒன்றுமில்லை.
இது ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சியைத் தொடங்கலாம். டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர் இது குறித்து தலைவர் மு.க.ஸ்டாலின் தெளிவாகக் கூறியுள்ளார். வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். விவசாயிகளிடம் கருத்துகளைக் கேட்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். தமிழகம் திராவிட மண். தமிழகத்தில் இருந்து திராவிடத்தை யாராலும் வீழ்த்த முடியாது. ஏனென்றால் இது தந்தை பெரியார் பூமி" என்றார்.